முடிவுக்கு வந்தது எதிரணியின் சத்தியாக்கிரகம்!
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவுக்காக முன்னெடுக்கப்பட்டுவந்த சத்தியாக்கிரகப் போராட்டம் தற்காலிகமாக இன்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றார் எனச் சுட்டிக்காட்டி அதற்கு எதிராகவும், சுரேஷ் சலேவுக்கு நீதி கோரியும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பமானது.
முன்னாள் அமைச்சர்களான விமல்வீரவன்ச, உதய கம்மன்பில, சரத் வீரசேகர, டிரான் அலஸ் மற்றும் சிங்கள தேசியவாத அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் கருத்து வெளியிட்ட விமல் வீரவன்ச,
“ மூன்று நாட்களாக முன்னெடுத்துவந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவருகின்றோம்.
சுரேஷ் சலேவின் உடல் நிலை குறித்து பரிசீலித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஐவர் கொண்ட விசேட மனநல மற்றும் தடயவியல் மருத்துவக் குழுவொன்றை நீதிமன்றம் நியமித்துள்ளது.
அந்தகுழு நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்வரை நாம் போராட்டத்தை கைவிடுகின்றோம். அந்த குழுவின் அறிக்கை தொடர்பில் திருப்தி இல்லையெனில் மீண்டும் போராட்டம் ஆரம்பமாகும்.” – என்றார்.





