7 சதவீதத்தால் உயரும் பணவீக்கம் : மத்திய வங்கி கணிப்பு!
மத்திய கிழக்கில் தொடரும் மோதல் மற்றும் அதிகரித்து வரும் உலகளாவிய எரிபொருள் விலைகள் காரணமாக நாட்டின் பணவீக்க விகிதம் 7 சதவீதமாக உயரக்கூடும் என்று இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், மத்திய கிழக்கு மோதல் குறுகிய காலத்தில் தீர்க்கப்படும் என்று ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டாலும், அதன் நீடித்த தன்மை இலங்கையின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
எரிபொருள் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால், பணவீக்கத்தின் மீது மேல்நோக்கிய அழுத்தம் உருவாகி வருவதாகவும், 5.4 சதவீதம் முதல் 5.5 சதவீதம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள பணவீக்கம், மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமைகள் தொடர்ந்தால், பணவீக்கம் 5 சதவீதத்தைத் தாண்டி 7 சதவீதத்தை எட்டக்கூடும் என்ற அபாயம் உள்ளது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.





