ஐரோப்பா செய்தி

ஆப்கானிஸ்தானில் கொடூரம்: பிரித்தானிய சிறப்பு படையின் மறுபக்கம் அம்பலம்!

2010 – 2013 காலப்பகுதியில்ஆப்கானிஸ்தானில் , பிரித்தானிய சிறப்புப் படையினரால் (SAS) பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்ட விவகாரம், அப்போதைய ஆப்கான் ஜனாதிபதி ஹமீத் கர்சாயை கடும் அதிருப்தியடையச் செய்திருந்ததாக லண்டனில் நடைபெற்று வரும் பொது விசாரணையொன்றில் தெரியவந்துள்ளது.

தலிபான்களுக்கு எதிராகப் போரிட்டு வந்த நேட்டோ (NATO) தளபதிகளிடம், இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதி கர்சாய் மிகவும் கடுமையான முறையில் தனது முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார் என்ற விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய சிறப்புப் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சுமார் 80 ஆப்கானிய பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக லண்டனில் பகிரங்க விசாரணை நடைபெற்றுவருகிறது.

இதில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய சாட்சியங்களின்படி, பிரித்தானியப் படைகளின் இத்தகைய கொடூரச் செயல்களால் அதிருப்தியடைந்த ஆப்கானிஸ்தானின் கூட்டுப் ராணுவப் படைகள், 2011ஆம் ஆண்டு வசந்த காலத்திற்குப் பிறகு பிரித்தானியர்களுடன் இணைந்து பணியாற்ற மறுத்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.

பொதுமக்கள் தொடர்ச்சியாகக் கொல்லப்படுவதற்குக் காரணமான ராணுவ உத்திகளை மறுஆய்வு செய்யும் பொறுப்பிலிருந்த ‘N1788’ என அடையாளப்படுத்தப்பட்ட பிரித்தானிய சிறப்புப் படையின் உயர் அதிகாரி ஒருவரின் சாட்சியத்தின் மூலமே இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

“பிரித்தானியப் படைகளின் தடுத்துவைப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் இறப்பு குறித்து நேட்டோவின் உயர் மட்டத் தளபதிகளிடம் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் மிகவும் ஆக்ரோஷமான முறையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதே காலகட்டத்தில், பிரித்தானிய சிறப்புப் படையின் ‘SU1’ என்ற பிரிவுடன் இணைந்து கூட்டு ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட ஆப்கானியப் படைகள் தயக்கம் காட்டியதை அனைவரும் அறிந்திருந்தனர்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, தலிபான்களின் கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை அதிகரித்திருந்த சமயத்தில், பிரித்தானியப் படைகள் மீதான ஆப்கான் ராணுவத்தின் இந்த அதிருப்தி நேட்டோ படைகளுக்குப் பெரும் பின்னடைவாகவும், ஒரு முக்கியப் பிரச்சினையாகவும் உருவெடுத்திருந்தது.

2011 ஏப்ரல் மாதத்தில், இரவு நேரங்களில் ஆப்கானியர்களின் வீடுகளை முற்றுகையிடும் பிரித்தானியப் படைகள், அங்குள்ள ஆண்களை மட்டும் தனியாகப் பிரித்து விசாரணைக்காக மீண்டும் வீட்டிற்குள் அழைப்பதைத் வழக்கமாகக் கொண்டிருந்தன.

அவ்வாறு உள்ளே அழைத்துச் செல்லப்பட்ட ஆப்கான் ஆண்கள், ஆயுதங்களை எடுக்க முயன்றதால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பிரித்தானியப் படைகள் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், விசாரணைக் குழுவின் தலைவர் சார்லஸ் ஹேடன்-கேவ் (Charles Haddon-Cave) எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அதிகாரி N1788, பல சந்தர்ப்பங்களில் கொல்லப்பட்ட ஆண்களின் எண்ணிக்கையை விட அங்கு கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்ததாக ஒப்புக்கொண்டார்.

ஆப்கான் ஆண்களைத் தனியே பிரித்தெடுக்கும் இந்த உத்தி, மோதல்களைக் குறைப்பதற்குப் பதிலாக, பிரித்தானியப் படைகளின் வன்முறையை நேரடியாக அதிகரிக்கவே வழிவகுத்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பிரித்தானிய சிறப்புப் படைகளுக்கு ஆப்கானிஸ்தானில் ஒரு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்ததாகவும், அதன்படி “அச்சுறுத்தலாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், தேடுதல் வளையத்திற்குள் வரும் அனைத்து ஆப்கானிய ஆண்களையும் கொன்றுவிட வேண்டும்” என்ற கொள்கையை SAS படையினர் பின்பற்றியதாக மற்றொரு பிரித்தானிய சிப்பாய் தனது மேலதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.

ராணுவ வட்டாரத்தில் இந்த கொடூர நடைமுறை “பிளாட் பேக்கிங்” (Flat Packing) என அழைக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய பிரித்தானிய அரசின் தலைமை வழக்கறிஞராக (Attorney General) இருக்கும் ரிச்சர்ட் ஹெர்மர் KC சமர்ப்பித்த சாட்சியத்தில், இரண்டு ஆப்கானிய ஆண்கள் தங்கள் குழந்தைகளுக்கு அருகில் தூங்கிக் கொண்டிருந்த போதே சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

2010 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் பிரித்தானிய சிறப்புப் படைகளின் தலைமை அதிகாரியாக இருந்த ‘N2252’ என்ற மற்றொரு அதிகாரி சாட்சியமளிக்கையில்:

“2009 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட பிரித்தானிய வீரர்கள் கொல்லப்பட்டதால் நாங்கள் பல இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது.

அதுபோன்ற இழப்புகள் மீண்டும் நிகழக் கூடாது என்பதற்காக, களத்தில் முடிவுகளைக் காட்ட வேண்டும் என்ற கடுமையான அழுத்தம் எங்கள் மீது இருந்தது. ஆனால், ஆண்களைத் தனியாகப் பிரிக்கும் உத்தி இத்தகைய எதிர்பாராத கொடூர விளைவுகளுக்கு (Unintended Consequences) வழிவகுக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை,” என்று தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் (Helmand) மாகாணத்தில் பிரித்தானிய சிறப்புப் படையினரின் இத்தகைய சட்டவிரோதக் கொலைகள் குறித்த முறைப்பாடுகளையடுத்து, 2022 டிசம்பரில் இந்த பொது விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

2010 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து 2023 அக்டோபரில் பகிரங்க விசாரணைகள் தொடங்கப்பட்ட போதிலும், அதன் முன்னேற்றம் மிகவும் மந்தமாகவே உள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜானி மெர்சர் (Johnny Mercer) தவிர, ஏனைய சிறப்புப் படை வீரர்களின் சாட்சியங்கள் அனைத்தும் ஊடகங்களோ அல்லது பொதுமக்களோ இன்றி முற்றிலும் ரகசியமாகவே பதிவு செய்யப்படுகின்றன.

SAS படையினரின் தினசரி பாதுகாப்பு நடவடிக்கைகளின் ரகசியத் தன்மையைப் பேணும் நோக்கில், இந்த சாட்சியங்களின் முக்கியப் பகுதிகள் நீக்கப்பட்டு (Redacted), சுருக்கமாகவே விசாரணை அறிக்கையில் சேர்க்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!