நாட்டின் 75 ஆண்டுகால சாபமே ஜே.வி.பிதான் – ராஜித்த சேனாரத்ன கடும் விமர்சனம்!
மாகாண சபை தேர்தல் முறைமைக்கு எதிராக கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி நாடு முழுவதும் தீவைக்கும் சம்பவங்களில் ஈடுபட்டதே ஜே.வி.பிதான் என முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஆரம்பகால அதிகாரப் பகிர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் ஜே.வி.பியினர் முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்டார்.
அத்துடன் விடுதலை புலிகள் அமைப்பு தலதா மாளிகைக்கு முதலாவதாக தாக்குதல் நடத்தவில்லை. ஜே.வி.பி தான் 1989 ஆம் ஆண்டு தலதா மாளிகைக்கு தாக்குதல் நடத்தியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நேரத்தில் ஜே.வி.பி நாடு முழுவதும் தீவைக்கும் சம்பவங்களில் ஈடுபட்டதாகவும், இதனால் அரசாங்கத்திற்கு 288 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை முழு நாட்டுக்கும் தீ வைத்த ஜே.வி.பி. இன்று 75 ஆண்டுகாலத்தை சாபம் என்று குறிப்பிடுகிறது. வரலாற்றை ஆராய்ந்து யார் நாட்டுக்கு சாபமாக செயற்பட்டது என்பதை இளம் தலைமுறையினர் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
நாங்கள் கட்சியை தான் மாற்றினோம். ஆனால் மக்கள் விடுதலை முன்னணியினர் தமது கொள்கையையே மாற்றியுள்ளார்கள். மாகாணசபைத் தேர்தல் தேர்தல் முறைக்கு எதிராக செயற்பட்ட மக்கள் விடுதலை முன்னணி இன்று மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் பிற்போடுகிறது என குற்றஞ்சாட்டியுள்ளார்.





