ஆஸ்திரேலியா திரும்பும் “IS மணப்பெண்கள்” – பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்!
IS பயங்கரவாதப் அமைப்புடன் தொடர்புடைய ஆஸ்திரேலியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்கிய மேலும் ஒரு குழுவினர் நாளை (26) தாயகம் திரும்பவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
7 பெண்கள் மற்றும் 13 குழந்தைகள் அடங்கிய இந்த குழுவினர் ஆஸ்திரேலியா திரும்புவதற்கான விமானப் பதிவுகளை ஏற்கனவே மேற்கொண்டுள்ளனர்.
இக்குழுவைச் சேர்ந்த 9 பேர் மெல்போர்ன் நகரிற்கும், ஏனையோர் சிட்னி நகரிற்கும் பயணிக்கவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இவர்களில் சில பெண்கள் ஆஸ்திரேலியாவை வந்தடைந்ததும் பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் குழுவினருக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் எந்தவித உதவிகளையும் வழங்காது என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் Tony Burke இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
“சிரியாவிலிருந்து திரும்புபவர்களை எதிர்கொள்வதற்கான ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறையின் (AFP) விசேட நடவடிக்கைகள் 2015ஆம் ஆண்டு முதலே நடைமுறையில் உள்ளன.
இக்காலப்பகுதியில், போரிடச் சென்ற 45 ஆண்கள் உட்பட பலர் ஏற்கனவே ஆஸ்திரேலியா திரும்பியுள்ளனர். இந்த குடிமக்கள் தாயகம் திரும்பத் தீர்மானித்தால், அவர்களை எதிர்கொள்ள எங்கள் பாதுகாப்பு முகமைகள் தயாராக உள்ளன.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தாயகம் திரும்பும் எவரும் “சட்டத்தின் முழு பலத்தையும் எதிர்கொள்ள நேரிடும்” என ஆஸ்திரேலியா அரசாங்கம் மீண்டும் எச்சரித்துள்ளது.
‘ஐஎஸ் மணப்பெண்கள்’ என்று அழைக்கப்படும் இந்த ஆஸ்திரேலியப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் குழு, சிரியாவின் வடகிழக்கில் உள்ள அல்-ரோஜ் (al-Roj) முகாமில் இருந்து கடந்த வியாழக்கிழமை மதியம் வெளியேறியுள்ளது.
சிரிய அரசு அதிகாரிகளின் பலத்த பாதுகாப்புடன் கூடிய வாகனப் பேரணியில் ஒரு பேருந்து மூலம் இவர்கள் தலைநகர் டமாஸ்கஸிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இம்மாத தொடக்கத்தில், இதேபோன்று நான்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆஸ்திரேலியா திரும்பியிருந்தனர்.
அவர்களில் மூன்று பெண்கள் மெல்போர்ன் மற்றும் சிட்னி விமான நிலையங்களை வந்தடைந்ததும் ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறையினரால் (AFP) கைது செய்யப்பட்டு, தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.





