பிரித்தானியாவில் வேலையின்மையை குறைத்தால் நலத்திட்டச் செலவும் குறையும் – JRF ஆய்வு
நலத்திட்ட உதவிகளைக் குறைப்பதை விட, வேலையின்மைக்கான அடிப்படை காரணங்களைத் தீர்ப்பதே அரசின் நலத்திட்டச் செலவைக் குறைக்கும் சிறந்த வழி என Joseph Rowntree (ரவுன்ட்ரீ) அறக்கட்டளை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வின்படி, வேலை செய்யும் வயதுடைய மக்களில் 80 வீதமானோரை வேலைவாய்ப்பில் இணைக்கும் அரசாங்க இலக்கு நிறைவேற்றப்பட்டால், யுனிவர்சல் கிரெடிட் திட்டச் செலவில் சுமார் £10 பில்லியன் பவுண்ட் குறைப்பு ஏற்படும என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தற்போதைய செலவின் எட்டில் ஒரு பங்காகும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மேலும், சமூகப் பாதுகாப்புக்கான செலவுகள் “கட்டுக்கடங்காமல் அதிகரிக்கின்றன” என்ற அரசியல் கருத்தை இந்த ஆய்வு மறுக்கிறது.
ஓய்வூதியம் பெறாதவர்களுக்கான நலத்திட்டச் செலவுகள், நாடாளுமன்ற காலத்தின் மீதியிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சுமார் 5% அளவிலேயே நீடிக்கும் என அதிகாரப்பூர்வ கணிப்புகள் காட்டுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு ஆதரவு தேவைப்படும் காரணங்கள் மறைந்துவிடுவதில்லை. மாறாக, பாதுகாப்பு வலையமைப்பில் உள்ள குறைபாடுகள் அதிகரித்தால், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களே அதிக பாதிப்பைச் சந்திக்கும்,” என JRF அமைப்பின் ஆய்வாளர் Sam Tims தெரிவித்துள்ளார்.





