இலங்கை செய்தி

கிரேக்க பிணைமுறி வழக்கு –  அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

கிரேக்க பிணைமுறி வழக்கில் நிபந்தனைகளை மீறியதாகத் தெரிவித்து, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்காக பிரதம நீதியரசரினால் நியமிக்கப்பட்ட நிரந்தர விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில்  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிபதிகள் குழாத்தில் மனோஜ் தல்கொடபிட்டிய, உதேஷ் ரணதுங்க மற்றும் புத்திக ஸ்ரீ ராகல ஆகிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடங்குகின்றனர்.

கிரேக்க பிணைமுறி வழக்கின் நிபந்தனைகளின் அடிப்படையில், அஜித் நிவாட் கப்ரால் செலுத்தவேண்டிய 184 கோடி ரூபாவிற்கும் அதிக தொகை இதுவரை செலுத்தப்படவில்லை.

கிரேக்கத்தில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்ததை அறிந்திருந்தும் அந்நாட்டு அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட பிணைமுறிகளை கொள்வனவு செய்தமையின் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு 184 கோடி ரூபாவிற்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், முன்னாள் பிரதி ஆளுநர் தர்மசேன தீரசிங்க, உதவி ஆளுநர்களான தொன் வசந்த ஆனந்த சில்வா மற்றும் எம்.ஏ.கருணாரத்ன ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

கடந்த வருடம் டிசம்பர் 10ஆம் திகதி அஜித் நிவாட் கப்ராலை நிபந்தனைகளுடன் விடுவிக்கவும் ஏனைய 03 பிரதிவாதிகளையும் நிபந்தனையின்றி விடுவிக்கவும் கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அஜித் நிவாட் கப்ரால் விடுவிக்கப்பட்ட நிபந்தனைக்கமைய, பிணைமுறி கொடுக்கல் – வாங்கலினால் ஏற்பட்ட 184 கோடி ரூபாவிற்கும் அதிக நட்டத்தை அவர் 03 மாதங்களுக்குள் இலங்கை மத்திய வங்கியில் வைப்பிலிட வேண்டும்.

அதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் கடந்த மார்ச் மாதம் 10ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நிரந்தர விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தை நியமிக்குமாறு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!