தைவானை பாதுகாக்குமா அமெரிக்கா? ட்ரம்பிடம் நேரில் வினா தொடுத்த சீன ஜனாதிபதி!
சீன ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது, தைவான் விவகாரம் குறித்து தான் எந்தவொரு உறுதிமொழியையும் வழங்கவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சீன விஜயத்தை நிறைவு செய்து வாஷிங்டன் திரும்பும் வழியில் விமானத்தில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தைவானுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அமெரிக்கா அதைப் பாதுகாக்குமா என்று சீன ஜனாதிபதி தன்னிடம் நேரடியாகக் கேட்டதாகவும், அதற்கு “நான் அதைப் பற்றிப் பேச விரும்பவில்லை” என்று பதிலளித்தாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தைவானுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யப்படும் என அமெரிக்கா முன்பு அறிவித்திருந்தது. இதற்கு சீனா கடும் கண்டனம் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த ஆயுத விற்பனையைத் தொடர்வதா, இல்லையா என்பது குறித்து “மிகக் குறுகிய காலத்திற்குள் ஒரு முடிவை” எடுக்கப் போவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.
தைவானை தனது பிராந்தியமாகவே சீனா கருதி வருகின்றது. ஆனால் அமெரிக்க உள்ளிட்ட சில நாடுகள் தைவானை தனி நாடாக கருதுகின்றன. அந்நாட்டுக்கு உதவிகளை வழங்கிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.




