பக்கவாதத்தை குணப்படுத்த புதியவகை மருந்து கண்டுப்பிடிப்பு!
பக்கவாதம் ஏற்பட்ட உடனேயே மூளை செல்களைப் பாதுகாக்க, உலகின் முதல் மூக்கு வழி தெளிப்பானை ஹாங்காங் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
இது அவசரகால மீட்பு கருவியாக செயற்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பக்கவாதம் என்பது இறப்பு மற்றும் இயலாமைக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இதனால் ஆண்டுதோறும் 890 பில்லியன் டொலர் செலவாகுகிறது.
பக்கவாதத்திற்கான தற்போதைய சிகிச்சையானது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே தொடங்குகிறது.
இரத்த உறைவை உடைக்கும் மருந்துகள் மற்றும் மூளைக்குச் செல்லும் தமனிகள் வழியாக இரத்த ஓட்டத்தை மீட்டெடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட மறுசீரமைப்பு சிகிச்சைகள் பயன்படுத்தப்படுகின்றன.
எவ்வாறாயினும் காலதாமத்தினால் 85 சதவீதமான நோயாளிகளால் இந்த சிகிச்சையை பெறமுடிவதில்லை.
இந்நிலையில் இவ்வாறான சிக்கல்களை சமாளிக்க, விஞ்ஞானிகள் மூளையைப் பாதுகாக்கும் மருந்துகளை முக்கிய மூலப்பொருளாகக் கொண்டு, மிகச்சிறிய உள்ளிழுக்கக்கூடிய தூள்களாக உருவாக்கப்பட்ட “நானோபவுடர்” (Nanopowder) நாசித் தெளிப்பானை உருவாக்கினர்.
இந்தத் தெளிப்பு நாசிக்குழிக்குள் உள்ளிழுக்கப்படும்போது, அது இலக்குப் பகுதியில் திறம்படப் படிந்து நானோ துகள்களாகப் பிரிந்து செயற்படுகிறது.
இந்த மூக்குத் தெளிப்பான் ஆரம்பகாலப் பாதுகாப்பை வழங்குகிறது. இது பக்கவாதம் ஏற்பட்ட உடனேயே மூளை செல்கள் இறப்பதை கணிசமாகக் குறைத்து, அடுத்தடுத்த சிகிச்சைகளுக்கு போதிய நேரத்தை வழங்குகிறது.
மேலும், பக்கவாதத்திற்கான மருத்துவமனைக்கு முந்தைய அவசர சிகிச்சைக்கு இது ஒரு திருப்புமுனைத் தீர்வாக அமையக்கூடும் என்றும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை பக்கவாதம் ஏற்பட்ட 30 நிமிடங்களுக்குள் இந்த மூக்குத் தெளிப்பானைப் பயன்படுத்துவது, மூளைத் திசுக்களின் இறப்பை 80 சதவீதத்திற்கும் மேலாகக் குறைத்து, நரம்பியல் மற்றும் உடல் இயக்கச் செயல்பாடுகளைப் பாதுகாக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.





