லெபனானில் ஐ.நா. அமைதி காக்கும் படை பணியை நீட்டிக்க வேண்டும் – சீனா வலியுறுத்தல்
லெபனானில்நீண்டகாலமாக செயற்பட்டு வரும் ஐ.நா. அமைதி காக்கும் படையின் (UNIFIL) பதவிக்காலத்தை முடிவுக்குக் கொண்டுவரும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான சீனாவின் தூதர் ஃபூ காங் (Fu Cong) தெரிவித்துள்ளார்.
நியூயார்க் (New York) நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் லெபனானின் தற்போதைய நிலைமை குறித்து சீனா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், லெபனானில் முழுமையான போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படவில்லையென்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, லெபனான் மீது நடைபெறும் குண்டுவீச்சுகளை நிறுத்துவது இஸ்ரேலின் (Israel) கடமை என்றும் சீன தூதர் வலியுறுத்தினார்.
ஐ.நா. செயலகம் ஜூன் மாதத்தில் அறிக்கை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அதன் பின்னரே சீனா தனது இறுதி நிலைப்பாட்டை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.





