ஐரோப்பாவும், ஆசியாவும் நன்றிக் கெட்டவை – பீட் ஹெக்ஸெத் விசனம்!
ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க உதவுமாறு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத் (Pete Hegseth) ஐரோப்பிய நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.
ஈரானில் தனது இராணுவ முயற்சிகளுக்கு உதவாததற்காகவும், ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாக்க உதவத் தவறியதற்காகவும் ஐரோப்பிய நாடுகளை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “நாங்கள் ஐரோப்பாவை நம்பியிருக்கவில்லை, ஆனால் எங்களை விட அவர்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி மிகவும் தேவைப்படுகிறது.
அவர்கள் ஐரோப்பாவில் குறைவாகப் பேசுவதையும், ஆடம்பரமான மாநாடுகளை நடத்துவதையும் குறைத்துக்கொண்டு, ஒரு படகில் ஏறிச் செயல்படத் தொடங்கலாம்,” என்று கூறியுள்ளார்.
அதேநேரம் ஈரானுடனான போர் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், இந்தபோர் டொனால்ட் ட்ரம்ப் “உலகிற்கு அளித்த பரிசு” என்றும் வர்ணித்துள்ளார்.
அத்துடன் ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகள் நன்றிகெட்டவை என்று குற்றம் சாட்டிய அவர், “பல தசாப்தங்களாக ஐரோப்பாவும் ஆசியாவும் எங்கள் பாதுகாப்பால் பயனடைந்துள்ளன, ஆனால் இலவசமாகப் பயனடைவதற்கான காலம் முடிந்துவிட்டது,” என்றும் கூறியுள்ளார்.





