பாதுகாப்பு செலவீனங்களை அதிகரிக்கிறது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கூடுதல் நிதியை பாதுகாப்புக்கு ஒதுக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இன்று (16) வெளியிடப்பட்டுள்ள ‘2026 தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தின்’ (National Defence Strategy 2026) படி, நாட்டின் பாதுகாப்புச் செலவினம் வரும் 2033 ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 3 சதவீதமாக உயர்த்தப்படவுள்ளது.
அடுத்த பத்து ஆண்டுகளில் பாதுகாப்புத்துறைக்காக கூடுதலாக 53 பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்படும். இதில் அடுத்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 14 பில்லியன் டாலர்கள் செலவிடப்படும்.
“இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஆஸ்திரேலியா எதிர்கொள்ளும் மிகச் சிக்கலான மற்றும் அச்சுறுத்தல் நிறைந்த சூழலை இப்போது நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்” என பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச விதிமுறைகள் வலுவிழந்து வருவது இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
நவீன காலப் போர்க்கருவிகளான ட்ரோன்கள் (Drones), ஏவுகணை உற்பத்தித் தொழில் மற்றும் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் (AUKUS ஒப்பந்தத்தின் கீழ்) ஆகியவற்றில் அதிக முதலீடுகள் செய்யப்படும்.
ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புத் திறனை சுயசார்பு கொண்டதாக மாற்றுவதே இந்த புதிய மூலோபாயத்தின் முதன்மை நோக்கமாகும்.
நேச நாடுகள் தங்களின் பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் ஆஸ்திரேலியாவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எனினும், இந்த நிதி ஒதுக்கீடு போதுமானதல்ல என்றும், கணக்கீட்டு முறைகளில் சில மாற்றங்களைச் செய்து அரசு தற்காத்துக் கொள்வதாகவும் ஆஸ்திரேலியாவின் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.





