ஜனாதிபதியின் பங்கேற்புடன் 2026 எண்ணெய் தேய்க்கும் அரச விழா!
புத்தாண்டின் பாரம்பரியங்களுக்கு அமைவாக 2026 எண்ணெய் தேய்க்கும் அரச விழா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் கண்டி வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகை, ஸ்ரீ மகா நாத தேவாலய வளாகத்தில் இன்று (15) காலை நடைபெற்றது.
மகா விகாரவங்சிக சியாமோபாலி மகா பீடத்தின் மல்வத்து மற்றும் அஸ்கிரி ஆகிய இரு பிரிவுகளின் மகா நாயக்க தேரர்களின் வழிகாட்டலுடன் சுகாதார மற்றும் வெகுஐன ஊடக அமைச்சு மற்றும் ஆயுர்வேத திணைக்களம் என்பன இணைந்து சம்பிரதாய முறைப்படி இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
இன்று (15) காலை வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி , பிறந்துள்ள சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக ஆசீர்வாதம் பெற்ற பின்னர், 2026 எண்ணெய் தேய்க்கும் அரச விழாவில் கலந்துகொண்டார்.

மத வழிபாடுகளைத் தொடர்ந்து, இன்று காலை 6.55 மணிக்கு சுப நேரத்தில் அஸ்கிரி பிரிவின் மகா நாயக்க தேரர் அதிவணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் அவர்கள், ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு முறைப்படி எண்ணெய் தேய்க்கும் சம்பிரதாயத்தினை முன்னெடுத்தார்.
இதன்போது மகா சங்கத்தினர் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதி உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினர்.
இதேவேளை, எண்ணெய் தேய்க்கும் சம்பிரதாயத்திற்காக தலதா மாளிகை வளாகத்திற்கு வருகை தந்திருந்த மக்களிடையே சென்ற ஜனாதிபதி, அவர்களின் நலன்களைக் கேட்டறிந்து சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போது அங்கிருந்த மக்கள் பிறந்துள்ள புத்தாண்டுக்காக ஜனாதிபதிக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.






