ஹார்முஸ் நீரிணை: சர்வதேச மாநாட்டை நடத்த தயாராகும் பிரான்ஸ், பிரிட்டன்!
“ஹார்முஸ் நீரிணை வழியாக தடையற்ற, பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதிசெய்வதற்குரிய சர்வதேச முயற்சிக்கு பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் தலைமை வகிக்கும்.”
இவ்வாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரன் Emmanuel Macron தெரிவித்தார்.
தனது அதிகாரப்பூர்வ எக்ஸ்தள பக்கத்திலேயே அவர் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு,
“மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் மோதலுக்கு, இராஜதந்திர வழியில் நீடித்த தீர்வை காண அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.
தீர்வு திட்டமானது மேற்படி பிராந்தியத்தில் உள்ள அனைவரும் அமைதியுடனும் பாதுகாப்போடும் வாழ்வதற்கு வழிவகுக்கும் ஒரு வலுவான கட்டமைப்பை வழங்க வேண்டும்.
இந்த முயற்சியின் மூலம், அனைத்து முக்கியப் பிரச்சினைகளுக்கும் நீடித்த தீர்வுகள் காணப்பட வேண்டும்.
ஈரானின் அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைச் செயல்பாடுகள், லெபனானின் இறையாண்மை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும்.
மோதல் தொடங்கிய முதல் நாளிலிருந்தே தொடர்ந்து முயன்று வருவதைப் போலவே, இப்போதும் தனது முழுப் பங்களிப்பை வழங்க பிரான்ஸ் தயாராக உள்ளது.
ஹார்முஸ் நீரிணை விவகாரத்தைப் பொறுத்தவரை, வரும் நாட்களில் பிரிட்டனும் இணைந்து நாங்கள் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்யவுள்ளோம்.
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்துச் சுதந்திரத்தை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட, அமைதி சார்ந்த ஒரு பன்னாட்டுப் பணியில் எங்களுடன் இணைந்து பங்களிக்கத் தயாராக இருக்கும் நாடுகளை இம்மாநாடு ஒன்றிணைக்கும்.” – என்றார் பிரான்ஸ் ஜனாதிபதி





