காதல் திருமணம் செய்த மகளை கொலை செய்த தந்தை: ஆந்திராவில் கொடூரம்!
குடும்ப எதிர்ப்பைமீறி காதல் திருணம் செய்துகொண்ட யுவதி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆந்திராவில் இடம்பெற்றுள்ளது.
ஆந்திராவின் மச்சேர்லா நகரைச் சேர்ந்த சவ்டேஸ்வரி (வயது 22) குடும்பத்தின் எதிர்ப்பை மீறி கடந்த மாதம் 4 ஆம் திகதி காதல் திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் மகள் சவ்டேஸ்வரியை காணவில்லை என அவரது தந்தை, மச்சேர்லா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து தேடுதல் நடத்திய பொலிஸார் கடந்த மாதம் 15 ஆம் திகதி சவ்டேஸ்வரியை கண்டுபிடித்தனர்.
காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர், யுவதியை மிரட்டி, பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
அவ்வாறு நடந்து மூன்று நாட்களுக்குப் பின் சவ்டேஸ்வரி தனது பெற்றோர் வீட்டில் இறந்துவிட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் கூறினார்.
எனினும், பிரேத பரிசோதனை அறிக்கையில் சவ்டேஸ்வரி தற்கொலை செய்யவில்லை என்றும், தலையணையை வைத்து முகத்தில் அழுத்தியதால், அவர் மூச்சுத் திணறி இறந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சவ்டேஸ்வரியின் தந்தை சந்திர சீனு மற்றும் உறவினர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் சவ்டேஸ்வரியின் குடும்பத்தினரை காப்பாற்ற பொலிஸ் இன்ஸ்பெக்டர் லஞ்சம் பெற்றிருக்கலாம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.





