ஈரானுக்காக தங்கம் வழங்கிய காஷ்மீர் மக்கள்!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஈரானுக்கு, காஷ்மீர் மக்கள் தம்மால் முடிந்த உதவிகளை வழங்கிவருகின்றனர்.
பணம் முதல் தங்கம் வரை தாராளமாக நன்கொடைகளை அவர்கள் வழங்கி உள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் மக்களுக்கு ஆதரவாக, காஷ்மீரின் பட்காம் மற்றும் பாரமுல்லா மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மனிதாபிமான அடிப்படையில் உதவி வழங்கத் தொடங்கியுள்ளனர்.
ஈகைத் திருநாள் கொண்டாட்டங்களைத் தொடர்ந்து, ஷியா பிரிவு மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று நிவாரணப் பொருட்களைச் சேகரித்தனர்.
அப்போது மக்கள் பணமாக மட்டுமல்லாமல், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், கால்நடைகள் மற்றும் பாரம்பரிய செப்புப் பாத்திரங்களையும் நன்கொடையாக வழங்கினர்.
இவர்களின் இந்த நடவடிக்கை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.
ஈரானை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக பணம் மற்றும் நகைகளை வழங்கிய இந்தியர்களின் ‘அன்பு’ மற்றும் ‘மனிதாபிமானத்துக்கு’ அந்நாட்டு தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது.





