யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகம் அகற்றப்படுமா?
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. எனினும், அது தொடர்பில் கடந்த காலங்களில் வதந்திகள் பரப்பட்டன என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர Major General Aruna Jayasekara தெரிவித்தார்.
ஈரான் கப்பல் விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் எதிரணிகள் வெளியிட்டுவரும் பொறுப்பற்ற செயலை சுட்டிக்காட்டும்போதே பிரதி அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டார்.
“மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது தோற்றியுள்ள பதற்ற நிலை தொடர்பாக, ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு சபை கூடி, விரிவாக ஆராயப்பட்டது.
உரிய வகையில் நாம் தீர்மானங்களை எடுத்துவருகின்றோம். இராஜதந்திர ரீதியில் நகர்வுகள் கையாளப்படுகின்றன.
ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றுக்கு எதிராக அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தவில்லை.
எனினும், அவசரகால சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று எதிர்க்கட்சியினர் கூறும் குற்றச்சாட்டை ஆதாரபூர்வமாக நிரூபிக்கவில்லை.
இவ்வாறுதான் கடந்த காலங்களில் யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் பரப்பட்டன. அது தவறான தகவலாகும்.
குறுகிய அரசியல் இலாபம் தேடும் அரசியல்வாதிகளின் செயற்பாடே இது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணிகள் விடுவிக்கப்படும் போது அனைத்துக் காரணிகளும் விரிவாக ஆராயப்படுகிறது.
தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கியே காணிகள் விடுவிக்கப்படுகின்றன.” – எனவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கூறினார்.





