அமெரிக்காவின் போர் நடவடிக்கை தீவிரமடைந்தால் பிரித்தானியாவுக்கு பெரும் சவால்
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகள் தீவிரமடைந்தால், அது பிரித்தானியாவுக்கு
புதிய பாதுகாப்பு சவால்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக சைப்ரஸில் அமைந்துள்ள பிரித்தானிய ரோயல் விமானப்படை தளமான அக்ரோதிரி (Akrotiri)
அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம் என்ற கவலை எழுந்துள்ளது.
இந்தநிலையில் மத்திய கிழக்கில் பிரித்தானிய படைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக கட்டாருக்கு டைபூன் (Typhoon) போர் விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ரோயல் விமானப்படை தளமான அக்ரோதிரியிலிருந்து ஆறு F-35 போர் விமானங்களும் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் இந்த F-35 விமானங்கள் ட்ரோன்களை சுட்டு வீழ்த்துவதற்காக வடிவமைக்கப்படவில்லை. அவை மிக உயர்தர எதிரிகளை
எதிர்கொள்ள உருவாக்கப்பட்டவை. ட்ரோன்களை வீழ்த்த பயன்படுத்தப்படும் ஏவுகணைகள் அதிக செலவானவை என்பதால்,
அவற்றின் பயன் குறித்த கேள்விகள் எழுகின்றன.
க்ரூஸ் ஏவுகணைகளை தடுக்க ஜெட் விமானங்கள் பயன்படுத்தப்படலாம். எனினும், அதற்கான மிகச் சிறந்த பாதுகாப்பு அமைப்பு பிரிட்டிஷ் இராணுவத்தின் Sky Sabre வான் பாதுகாப்பு அமைப்பாகும். இந்த அமைப்பு பயன்படுத்தப்பட்டதா என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை இரவு RAF அக்ரோதிரி ஓடுபாதையில் மோதிய ஒரு தாக்குதல் ட்ரோனை தடுக்க முடியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், தாக்குதல் ட்ரோன்களை எதிர்கொள்ளும் நிபுணத்துவ தரைப்படைகள் அப்பகுதியில் உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
மேலும், ஈரானின் குறுகிய மற்றும் நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் சைப்ரஸ் மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளைத் தாக்கும் திறன் கொண்டதாக மதிப்பிடப்படுகிறது. பிரித்தானிய நிலப்பகுதியை நேரடியாக தாக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் ஈரானிடம் இல்லை என்றாலும், சைப்ரஸ் வரை தாக்கும் திறன் இருப்பதாக கூறப்படுகிறது.





