போர் பதற்றம் : ஈரானே பொறுப்பு – சீனாவின் உதவியை நாடிய பிரான்ஸ்!!
பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பரோட் (Jean-Noel Barrot) மத்தியக் கிழக்கில் நிலவும் பதற்ற நிலைமையை தணிக்க சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியுடன் (Wang Yi) பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மேலும் இருவரும் பதற்றத்தைக் குறைக்கப் பாடுபட ஒப்புக்கொண்டதாக பிரெஞ்சு வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஈரானிய மக்களின் விருப்பங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒரு அரசியல் தீர்வைத் தேடுவதற்கும் இருநாட்டு தலைவர்களும் இதன்போது உறுதிப் பூண்டுள்ளனர்.
இதேவேளை பிராந்தியம் முழுவதும் தொற்றிக் கொண்டுள்ள மோதலுக்கான பொறுப்பை ஈரான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நோயல் பரோட் அழைப்பு விடுத்துள்ளார்.
அணுசக்தி திட்டங்கள், பாலிஸ்டிக் நடவடிக்கைகள், அரசு சாரா ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு மற்றும் நல்லெண்ண பலதரப்பு பேச்சுவார்த்தைகளை நிராகரிப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மதிக்க மறுத்ததற்காக ஈரானிய ஆட்சியையும் அவர் விமர்சித்துள்ளார்.





