பழிவாங்கல் வேண்டாம்: கருணை காட்டுங்கள்! இம்ரான் கானுக்காக இலங்கை எம்.பி. களத்தில்!!
“பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு சிகிச்சை பெறுவதற்காக மனிதாபிமான ரீதியிலேனும் அனுமதி வழங்கப்பட வேண்டும்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் SJP நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் Imran Magaroop தெரிவித்தார்.
விசேட அறிக்கையொன்றின் ஊடாகவே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது.
இது தொடர்பில் அவரால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,
” பாகிஸ்தானின் ஒரு தலைவராக மட்டுமன்றி, உலகப்புகழ் பெற்ற ஒரு விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தவர் இம்ரான் கான்.
தற்போது சிறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவருக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை உரிமைகள் மற்றும் மனிதாபிமான ரீதியிலான சிகிச்சைகள் முறையாக வழங்கப்படுவதை பாகிஸ்தான் அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
அரசியலுக்கு அப்பால், ஒரு மனிதனாக அவருக்கு முறையான மருத்துவ வசதிகளும், கௌரவமான பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டியது சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.
இலங்கை முஸ்லிம்கள் மிக இக்கட்டான நிலையில் இருந்தபோது, எங்களுக்காக சர்வதேச அரங்கில் துணிச்சலுடன் குரல் கொடுத்தவர் இம்ரான் கான் என்பதை நாம் மறந்துவிட முடியாது.
குறிப்பாக, இலங்கையில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அன்றைய அரசாங்கம் பலவந்தமாக எரித்தபோது, அதற்கு எதிராக உலக அளவில் கடும் அழுத்தம் கொடுத்தவர் இம்ரான் கான்.
அவர், இலங்கை வந்திருந்த வேளையிலும், சர்வதேச ராஜதந்திர மட்டத்திலும் அவர் கொடுத்த அழுத்தங்கள், முஸ்லிம்களின் மத உரிமையை நிலைநாட்டவும், ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியை மீளப் பெற்றுக்கொள்ளவும் மிக முக்கிய காரணியாக அமைந்தது.
எமது சமூகத்தின் மத உரிமைகளுக்காகவும், உணர்வுகளுக்காகவும் அன்று தோள் கொடுத்த ஒரு தலைவரின் இன்றைய நிலை குறித்து மௌனம் காக்க முடியாது.
அவருக்கு இழைக்கப்படும் அநீதிகள் களையப்பட்டு, அவர் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும்.
அரசியல் பழிவாங்கல்களைத் தவிர்த்து, நீதியான முறையில் இம்ரான் கானின் விவகாரம் அணுகப்பட வேண்டும் என பாகிஸ்தான் அரசாங்கத்தையும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளையும் இந்த அறிக்கையினூடாக வலியுறுத்துகின்றேன்.” என்றுள்ளது.





