அகதி தஞ்சம் கோருவோருக்கு பிரிட்டன் கதவடைப்பு!
பிரிட்டனில் புகலிடம் கோருபவர்களுக்கு தற்காலிகமாக மட்டுமே புகலிடம் வழங்குவதற்குரிய கொள்கைத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் Home Secretary Shabana Mahmood இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.
உத்தேச முன்மொழிவுக்கமைய அகதிகளுக்கு இனி நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படாமல், தற்காலிகமாகவே அதற்குரிய வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
30 மாதங்களுக்கு ஒருமுறை தற்காலிக குடியுரிமை மீளாய்வுக்குட்படுத்தப்படும்.
சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலேயே குடியேற்ற சட்டங்களை கடுமையாக்குவதற்குரிய இந்த நகர்வை பிரிட்டன் முன்னெடுக்கின்றது.
எனினும், புதிய நடைமுறையானது அகதிகளின் மறுவாழ்வு மற்றும் வேலைவாய்ப்பைப் பாதிக்கும் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
புகலிடம் கோருவோரைச் சொகுசு விடுதிகளில் தங்கவைப்பதை நிறுத்தி, அடிப்படை வசதிகள் கொண்ட முகாம்களுக்கு மாற்றுவது பற்றியும் பரிசீலிக்கப்படுகின்றது.
பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறவும் நாட்டின் எல்லைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கைகள் அவசியம் என பிரிட்டன் உள்துறைச் செயலாளர் Shabana Mahmood குறிப்பிட்டுள்ளார்.





