திமுக ஆட்சியில் இரண்டரை வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை
திமுக ஆட்சியில் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லை, அத்தனை குற்றவாளிகளுக்கும் புகலிடம் தருகிறது திமுக” என பாமக தலைவர் அன்புமணி குற்றம் சுமத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
“இரண்டரை வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சட்டி அருகில் கவுண்டன் கொட்டாய் கிராமத்தில் இரண்டரை வயது குழந்தையை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்ததாக திமுக இளைஞரணி நிர்வாகி பெரியநாயகம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெய்வமாகக் கொண்டாடப்பட வேண்டிய குழந்தையை திமுகவைச் சேர்ந்த மனித மிருகம் ஒன்று கொடூரமான முறையில் வேட்டையாடியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த மனித மிருகத்தை தப்பவிடக் கூடாது.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழ்நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமைகள், கொலைகள், கொள்ளைகள் என அனைத்து வகையான குற்றங்களும் அதிகரித்துவிட்டன. கவுண்டன் கொட்டாய் கிராமத்தில் இரண்டரை வயது குழந்தையை திமுக நிர்வாகி சீரழித்ததைப் போலவே தமிழகத்தில் நடைபெறும் பெரும்பான்மையான குற்றங்களுக்கு திமுக நிர்வாகிகள் தான் காரணமாக உள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்துவிட்டாலே அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு போதை மருந்து கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களையும் செய்வதற்கு உரிமம் வழங்கப்படும் நிலைதான் நிலவுகிறது.
திமுகவினர் குற்றம் செய்தால் சர்வாதிகரியாக மாறுவேன் என்று வீர வசனம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுகவினரின் அனைத்துக் குற்றங்களையும் கண்டுகொள்ளாமல், கைக்கட்டி, வாய்ப்பொத்தி நிற்பதுதான் இத்தகைய குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்குக் காரணம் ஆகும்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் பெருகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுக்கு 22 இலட்சம் கிலோ கிராம் கஞ்சா புழக்கத்தில் விடப்படும் அளவுக்கு நிலைமையை சீரழித்ததுதான் திமுக அரசின் சாதனையாகும். திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 54 வீதமும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61 வீதமும் அதிகரித்திருக்கின்றன. இந்த அவலங்கள் அனைத்திற்கும் திமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.





