திமுக அணியில் தேமுதிக கேட்கும் தொகுதிகளால் நெருக்கடி
திமுக கூட்டணியில் சேர்ந்ததால் தேமுதிகவும் ஒரு தொகுதி மதுரையில் கேட்பதால், ஏற்கெனவே திட்டமிட்டு தொகுதிகளைக் கேட்டு காய் நகர்த்தி வந்த ஏனைய கூட்டணிக் கட்சிகளுக்கு விரும்பிய தொகுதிகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக, கடந்த முறை மதுரை கிழக்கு, மத்திய, வடக்கு, சோழவந்தான் மற்றும் தெற்கு ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இதில், தெற்கில் மதிமுகவின் பூமிநாதன் வெற்றிபெற்றார். ஆனால், அதிமுக தனிப்பெரும் கட்சியாக மாவட்டத்தில் 5 தொகுதிகளைக் கைப்பற்றியது.
அந்தக் கட்சி தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போதிலும் எதிர்ப்பு அலையைத் தாண்டி மதுரையில் இந்த வெற்றியை அக்கட்சி பெற்றது.
மதுரை அதிமுகவுக்குச் செல்வாக்கான மாவட்டம் என்பதால் இந்த முறையும் திமுகவுக்கு அக்கட்சி கடும் போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேமுதிக, திமுக மற்றும் அதிமுகவுடன் மாறிமாறி கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியநிலையில், அந்த கட்சியின் விருப்பத் தொகுதியாக மதுரையில் ஒன்று இருந்துள்ளதாக பேச்சுவார்த்தை நடத்திய நிர்வாகிகள் கூறினர்
இந்நிலையில் தற்போது திமுக கூட்டணியில் இணலந்துள்ள தேமுதிக, விரும்பிக் கேட்பதில் திருப்பரங்குன்றம், மதுரை மத்தி ஆகிய தொகுதிகள் உள்ளன. மதுரை மத்தி, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொகுதி என்பதால் திமுக அதை உறுதியாக விட்டுக்கொடுக்காது. அதற்கு அடுத்த தேர்வாக தேமுதிகவுக்கு திருப்பரங்குன்றம் உள்ளது.





