பிரித்தானியாவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வானிலையில் மாற்றம்
பிரித்தானியாவில் தொடர்ச்சியாக பதிவான பலத்த மழை வீழ்ச்சிக்கு பின்னர் வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆர்க்டிக் காற்றின் தாக்கத்தால் வார இறுதி குளிர்ச்சியாகவும் உறைபனியுடனும் தொடங்கியுள்ளது.
குறிப்பாக வடக்கு பகுதிகளில் மிதமான பனிப்பொழிவு மற்றும் பனி படர்ச்சி காணப்படுகின்றது.
சனிக்கிழமை பெரும்பாலான இடங்களில் வெயில் காணப்பட்டாலும், இந்த நிலை தற்காலிகமானது
என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு வரை மேலும் பனியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை அலுவலகம் (Met Office), ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் திங்கள் காலை 10 மணி வரை பனி மற்றும் பனிக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பனிக்கட்டிகள் உருவாகும் சாத்தியம் காணப்படுவதால், ஞாயிறு காலை பயணங்களில் இடையூறு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பிரித்தானியாவின் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் வடக்கு இங்கிலாந்து மற்றும் மிட்லாண்ட்ஸ் பகுதிகளுக்கு குளிர் காலநிலைக்கான மஞ்சள் சுகாதார எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குளிரான வானிலை சுகாதாரம் மற்றும் சமூக பராமரிப்பு சேவைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும்,
பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு கூடுதல் ஆபத்து உருவாகலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





