விருந்தினர்களுக்கு தனது விடுமுறை இல்லத்தை பரிந்துரைந்த மண்டேல்சன் – அடுத்தடுத்து வெளியாகும் மர்மங்கள்
ஜெஃப்ரி எப்ஸ்டீனைச் சுற்றிய சர்ச்சைகள் அவர் உயிரிழந்த பல ஆண்டுகளுக்குப் பின்னரும் புதிய திருப்பங்களை எடுத்து வருகின்றன. காலம் கடந்தும் வெளியாகும் அமெரிக்க நீதித்துறை ஆவணங்கள், அவருடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் அரசியல் முக்கியஸ்தர்கள் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்புகின்றன. அந்த வரிசையில், முன்னாள் தொழிற்கட்சி அமைச்சர் லோர்ட் பீட்டர் மண்டேல்சனின்
பெயரும் தற்போது விவாதத்திற்குள் வந்துள்ளது.
பிரித்தானியாவின் முன்னாள் தொழிற்கட்சி அமைச்சர் லோர்ட் பீட்டர் மண்டேல்சன், மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு, விருந்தினர்களை வரவேற்க ஏற்றவாறான தனியுரிமை கொண்ட விடுமுறை இல்லம் ஒன்றை பரிந்துரைத்திருந்ததாக
அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அந்த ஆவணங்களின்படி, 2010 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சலில், இத்தாலியின் அமல்ஃபி கடற்கரைப் பகுதியில் உள்ள, விருந்தினர்களுக்கான அறைகள் கொண்ட தனியுரிமை இல்லத்தை விடுமுறைக்காக பயன்படுத்தலாம் என மண்டேல்சன் எப்ஸ்டீனுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
திருத்தப்பட்ட நிலையில் வெளியிடப்பட்ட ஆவணங்களிலும் கூட, மண்டேல்சனின் மின்னஞ்சல் முகவரி தெளிவாகக் காணப்படுவதாக பிபிசி தெரிவித்துள்ளது. மின்னஞ்சலில் “விருந்தினர்கள்” என்ற சொல்லுக்கு மேற்கோள் குறிகள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும்,
அந்த நபர்கள் யார் என்பது குறித்து எந்த விபரங்களும் வெளியிடப்படவில்லை.
மேலும், அந்த விடுமுறை இல்லத்தில் எப்ஸ்டீன் தங்கியிருந்தாரா என்பது குறித்த உறுதியான தகவலும் ஆவணங்களில் இல்லை. இந்தநிலையில், 2019 ஆம் ஆண்டில் எப்ஸ்டீன் உயிரிழந்ததற்குப் பின்னரே, அவரது உண்மையான குற்றச்செயல்கள் தங்களுக்கு தெரிய வந்ததாக லோர்ட் மண்டேல்சனின் செய்தித் தொடர்பாளரும் சட்டத்தரணிகளும் தெரிவித்துள்ளனர்.
15 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பிய அந்த மின்னஞ்சல் தங்களுக்கு நினைவில் இல்லை என்றும், பலவீனமான பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதிக்கப்பட்ட சம்பவங்களில் ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், 2009 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில், மண்டேல்சன் மற்றும் எப்ஸ்டீன் இடையே பல மின்னஞ்சல் பரிமாற்றங்கள் நடந்துள்ளதாக ஆவணங்கள் காட்டுகின்றன.
இதில், எப்ஸ்டீன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதை எவ்வாறு கொண்டாடுவது, அமல்ஃபி கடற்கரையில் விடுமுறை கழிப்பது போன்ற விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தகவல்கள், இருவருக்கும் இடையில் இருந்த தொடர்பு சாதாரண அறிமுகத்தை விட நெருக்கமானதாக இருந்திருக்கலாம் என்ற கேள்விகளை எழுப்புவதாக
அந்த ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இவ்வாறான மின்னஞ்சல் பரிமாற்றங்கள், மண்டேல்சன் மற்றும் எப்ஸ்டீன் இடையிலான தொடர்பு எவ்வளவு நெருக்கமானது என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகின்றன.
அதிகாரபூர்வமாக எந்த குற்றச்சாட்டும் உறுதிப்படுத்தப்படாத நிலையிலும், தொடர்ந்து வெளியாகும் ஆவணங்கள் இந்த உறவுகள் வெறும் சமூக பழகலா, அல்லது அதற்கு அப்பாற்பட்டதா என்ற கேள்விகளை விடாமல் எழுப்புகின்றன.
மேலும் ஆவணங்கள் வெளியாவிட்டால் மட்டுமே, இந்த சர்ச்சைக்கு தெளிவான முடிவு கிடைக்கக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.





