அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி மகிழ்ச்சி!
இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தம் மிகச் சிறந்த செய்தி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ளார்.
‘‘ இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஓர் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளோம்.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வலுவான உறவுகளுக்கு காரணமாக இருக்கும் ஜனாதிபதி ட்ரம்ப்பின் தனிப்பட்ட அர்ப்பணிப்புக்கு நான் நன்றி கூறுகிறேன்.” எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தம், நமது கூட்டாண்மையின் ஆழம், நம்பிக்கை மற்றம் துடிப்பை பிரதிபலிக்கிறது.
மேற்படி ஒப்பந்தம்மூலம் இந்திய விவசாயிகள், தொழில்முனைவோர், சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர், ஸ்டார்ட்அப் கண்டுபிடிப்பாளர்கள், மீனவர்கள் உள்ளிட்டோருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும்.
அத்துடன், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பெரிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கும்.
இந்தியாவும் அமெரிக்காவும் புதுமைகளை ஊக்குவிப்பதற்கான உறுதிப்பாட்டை பகிர்ந்து கொள்கின்றன.
இந்த ஒப்பந்தம், நமக்கு இடையே முதலீடு மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மைகளை மேலும் ஆழப்படுத்தும்.
மேலும், நெகிழ்ச்சியான, நம்பகமான விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தும்.
வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதை நோக்கி முன்னேறும்போது, அது நமது மக்களுக்கு அதிகாரத்தை அளிக்கும்.
மேலும், பகிரப்பட்ட செழிப்புக்கு பங்களிக்கும் உலகளாவிய கூட்டாண்மைகளை உருவாக்க நாங்கள் ஊறுதிபூண்டுள்ளோம்’’ எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.





