லண்டனில் வாழும் பெண் சமூக ஆர்வலரை குறிவைத்துள்ள சீன உளவாளிகள்?
லண்டனில் வசிக்கும் முன்னணி சீன சமூக ஆர்வலர் ஒருவரை, பாலியல் நடத்தை கெட்டவராகவும் போதைக்கு அடிமையானவராகவும் சித்தரிக்கும் போலி பதிவுகள் எக்ஸ் தளத்தில் பரப்பட்டன.
எனினும், இந்த அவதூறுகள் எலோன் மஸ்க்கின் ‘X’ தளத்தின் விதிகளை மீறவில்லை என்று கூறி அந்த நிறுவனம் நடவடிக்கை எடுக்க மறுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனைத் தளமாகக் கொண்ட China Dissent Network என்ற அமைப்பின் 27 வயது நிறுவனரான Apple Peiqing Ni என்பவர் , சீன அரசு ஆதரவு ‘பாட்’ (Bot – தானியங்கி கணக்கு) மூலம் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக நம்புகிறார்.
பிரிட்டன் காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட எக்ஸ் தளத்தில் அவர் இது குறித்துப் முறைப்பாடு செய்திருந்தார்.
Apple Peiqing Ni யின் கணக்கைக் குறியிட்டு (Tag) அவரது போலி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் 12 பதிவுகள் வெளியிடப்பட்டன.
அவற்றில் அவர் “மிக மோசமான பாலியல் உறவுகளைக் கொண்டவர்” என்றும், “கடுமையான போதைப்பொருள் பயன்படுத்துபவர்” என்றும் சித்தரிக்கப்பட்டிருந்தார்.
மற்றொரு பதிவில், “லண்டன் வீதிகளில் சீன எதிர்ப்பு குழுக்களுடன் போராடிய Ni , மிகக் கொடூரமாக அடித்து நொறுக்கப்பட்டார். அவரது தீவிரவாத நடத்தைக்குக் கிடைத்த சரியான தண்டனை இது” என்று வதந்தி பரப்பிக் கொண்டாடப்பட்டது.
“ஒரு நபரை அவமானப்படுத்தும் நோக்கில் அல்லது தரம் தாழ்த்தும் நோக்கில் தன்னிச்சையாகக் குறியிட்டு (Tag) பதிவிடுவதை” எக்ஸ் தளத்தின் விதிகள் தடை செய்கின்றன.
இருப்பினும், ‘Ni’ அளித்த புகார்களை ஆய்வு செய்த எக்ஸ் நிறுவனத்தின் தானியங்கி தொழில்நுட்பம், இந்த பதிவுகள் தங்களின் வன்முறை அல்லது அச்சுறுத்தல் விதிகளுக்குப் புறம்பானவை அல்ல என்று கூறி முறைப்பாட்டை நிராகரித்தது.
இது குறித்து The Guardian, எக்ஸ் நிறுவனத்தின் ஊடகப் பிரிவைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்ட சில மணி நேரங்களிலேயே, அந்த அவதூறு கணக்கு முடக்கப்பட்டது.
சீன உளவுத்துறையின் மிரட்டல்
2019-ல் கல்வி கற்பதற்காக பிரிட்டன் வந்த Apple Peiqing Ni , சீனாவில் உள்ள தனது குடும்பத்தினருக்குச் சீன ரகசியப் பொலிஸார் மூலம் மிரட்டல் விடுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
“நான் வெளிநாட்டில் எனது சமூக செயல்பாடுகளைத் தொடர்ந்தால், எனது பெற்றோரின் தொழில் பாதிக்கப்படும் என்றும், எனது தாத்தாவின் கல்லறை தோண்டப்படும் என்றும் சீனாவில் உள்ள என் பெற்றோரை ரகசியப் பொலிஸார் நேரில் சென்று மிரட்டியுள்ளனர்” என்று அவர் கூறினார்.
மேலும், தன்னிடம் பூனை இருக்கும் விபரத்தைச் சரியாகக் குறிப்பிட்டு, தான் விலங்குகளைத் துன்புறுத்துவதாக ஒரு பதிவில் கூறப்பட்டிருந்தது.
இதன் மூலம் சீன உளவு அமைப்புகள் தன்னை முழுமையாகக் கண்காணித்து Profiling செய்வதாகவும், வீட்டை விட்டு வெளியேறும் போதெல்லாம் யாரோ பின்தொடர்வது போன்ற பயம் தனக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் வெறுப்புப் பேச்சு மற்றும் பயங்கரவாத உள்ளடக்கங்களை 24 மணி நேரத்திற்குள் நீக்குவதாக X தளம் , பிரிட்டன் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான Ofcom உடன் சமீபத்தில் ஒப்பந்தம் செய்தது.
ஆனால், சீன அதிருப்தியாளர்களுக்கு எதிராக நடக்கும் இதுபோன்ற கடுமையான தனிநபர் அவதூறுகள் மற்றும் அச்சுறுத்தல்களைத் தடுப்பதில் X தளம் ஆர்வம் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து எக்ஸ் நிறுவனம் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ கருத்தையும் தெரிவிக்கவில்லை.




