இலங்கையிலிருந்து விடைபெறும் சுவிஸ் தூதுவர் வடக்கு ஆளுநருடன் அவசர சந்திப்பு!

இலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லும் சுவிட்சர்லாந்து தூதுவர் சிறி வோல்ட் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று (08) காலை நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின்போது, சுவிட்சர்லாந்து அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு செயற்றிட்டங்களுக்குக் ஆளுநர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
மத்திய கிழக்குப் போர் காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றம் மற்றும் அதனால் வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் தொடர்பில் தூதுவர் இதன்போது கேட்டறிந்து கொண்டார்.
இந்த விலையேற்றத்தின் காரணமாக, வடக்கு மாகாண சபையால் ஆரம்பிக்கப்பட்ட பெருமளவிலான அபிவிருத்தித் திட்டங்களை மீள்மதிப்பீடு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளமையை ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி (மிதிவெடி) அகற்றும் செயற்பாடுகள் மற்றும் அதற்கான சுவிஸ் அரசாங்கத்தின் தொடர்ச்சியான பங்களிப்புத் தொடர்பிலும் இச்சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் இலங்கை மிகச் சிறப்பான அடைவுகளைக் கொண்டுள்ளதாகச் சுவிஸ் தூதுவரால் பாராட்டப்பட்டது.
மேலும், வடக்கு மாகாணத்தின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்துறையின் தற்போதைய செயற்பாடுகள், சந்தையில் பொருட்களின் விலைத்தளம்பல் மற்றும் அதனால் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள், சிக்கல்கள் தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.
அத்துடன், வடக்கு மாகாணத்தின் தற்போதைய பொதுவான நிலைமைகள் குறித்தும் சுவிஸ் தூதுவர் ஆளுநருடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.








