ஆஸ்திரேலியாவில் ஒரு லட்சம் கரப்பான் பூச்சிகள் பறிமுதல்!
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு வணிக இனப்பெருக்க மையத்திலிருந்து சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு கரப்பான் பூச்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சிட்னியில் இருந்து மேற்கே 200 கி.மீ தொலைவில் உள்ள Bathurst என்ற இடத்திலேயே குறித்த நிலையம் அமைந்துள்ளது.
மடகாஸ்கர் ஹிஸ்ஸிங் Madagascar hissing மற்றும் துபியா Dubia போன்ற சட்டவிரோத இனங்களைச் சேர்ந்த இவை, இரண்டு லட்சம் டாலர்கள் ஆஸ்திரேலிய பெறுமதி கொண்டவை என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டு இனங்களையும் ஆஸ்திரேலியாவிற்குள் சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யவோ, வளர்க்கவோ, இனப்பெருக்கம் செய்யவோ அல்லது விற்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த பூச்சிகள் பெரும்பாலும் ஊர்வன வகை செல்லப்பிராணிகளுக்கு உணவாகப் பயன்படுத்தப்பட்டாலும், இவை பரப்பக்கூடிய நோய்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் காரணமாகவே தடை செய்யப்பட்டுள்ளன.
இவ்வளவு பெரிய அளவிலான சட்டவிரோத பூச்சிகள் பிடிபடுவது ஆஸ்திரேலிய வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
பிடிபட்ட பூச்சிகள் அனைத்தும் அழிக்கப்பட உள்ள நிலையில், செல்லப்பிராணி வளர்ப்போர் சட்டபூர்வமான மாற்று உணவுகளை பயன்படுத்துமாறு அரசு எச்சரித்துள்ளது.
தடையை மீறி இவற்றை வளர்ப்பவர்கள் அல்லது விற்பனை செய்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.





