பிரிட்டன் ராணுவ இரகசியங்களை குறிவைக்கும் சீனா! உளவு பிரிவு எச்சரிக்கை!
பிரிட்டன் அரசாங்கம் மற்றும் இராணுவ அதிகாரிகளை இலக்கு வைத்து, LinkedIn போன்ற வேலைவாய்ப்பு இணையத்தளங்கள் ஊடாக சீன உளவாளிகள் இரகசியத் தகவல்களைத் திரட்ட முயன்று வருவதாக MI5 எச்சரித்துள்ளது.
பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘பைவ் ஐஸ்’ (Five Eyes) உளவு அமைப்புகளின் கூட்டமைப்பு இது தொடர்பான எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சீன இராணுவ உளவுத்துறையைச் சேர்ந்தவர்கள், தனியார் நிறுவனங்கள் அல்லது சிந்தனைக் குழுக்களின் (Thinktanks) பணியாளர்கள் போல நடித்து இணையத்தளங்கள் ஊடாக “தீவிரமான” முறையில் ஆட்களைச் சேர்க்கும் உத்தியைக் கையாண்டு வருவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெளிநாட்டுக் கொள்கை அல்லது பாதுகாப்பு ஆய்வாளர் போன்ற போலிப் பதவிகளுக்கு அவர்கள் விளம்பரம் செய்கின்றனர். பின்னர், அந்த வேலைகளுக்கு விண்ணப்பிப்போரை நெருக்கி, அரசாங்கத்தின் பகிரங்கப்படுத்தப்படாத உள்நாட்டு இரகசியத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முயல்வதாக உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன.
LinkedIn , Indeed மற்றும் Upwork போன்ற தொழில்முறை இணையத்தளங்களில் இருக்கும் நபர்களே இவ்வாறு குறிவைக்கப்படுகின்றனர்.
உலகின் வேறு பகுதிகளில் இயங்கும் உண்மையான நிறுவனங்களைப் போல போலியாகக் காட்டி, தங்களை மனிதவள ஆலோசகர்கள் என அடையாளப்படுத்தும் சீன முகவர்கள், பிரித்தானியாவின் இரகசியத் தகவல்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அணுகக்கூடிய நபர்களைத் தேடிக் கண்டறிகின்றனர்.





