ராணுவ நடவடிக்கைகளுக்கு தடை: அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம்!
ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு ஆதரவாக அமெரிக்க பிரதிநிதிகள் சபை (House of Representatives) வாக்களித்துள்ளது.
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்த வார இறுதியில் நல்லதொரு முன்னேற்றம் ஏற்படக்கூடும் என ஜனாதிபதி டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ள நிலையிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காங்கிரஸின் (அமெரிக்க நாடாளுமன்றம்) அனுமதி பெறாமல் ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ஜனநாயகக் கட்சியினரால் கொண்டு வரப்பட்ட ‘போர் அதிகாரத் தீர்மானத்திற்கு’ ஆதரவாக பிரதிநிதிகள் சபை வாக்களித்துள்ளது.
இந்தத் தீர்மானம் ஜனாதிபதி டிரம்ப்பை போரை முழுமையாக நிறுத்தும்படி கட்டாயப்படுத்தாது என்ற போதிலும், மேல்மட்ட இராணுவ நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான முதல் சட்டரீதியான படியாக இது அமையும் எனக் கருதப்படுகிறது.
பிரதிநிதிகள் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 215 வாக்குகளும், எதிராக 208 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதில் டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த (Republicans) நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறி ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
போர் அதிகாரத் தீர்மானம் ஒன்று பிரதிநிதிகள் சபையில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னர் கொண்டு வரப்பட்ட மூன்று தீர்மானங்கள் தோல்வியடைந்திருந்தன.
இருப்பினும், இந்த வாக்கெடுப்பினால் உடனடியாகப் போரில் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டுவிடாது.
ஏனெனில், இந்தத் தீர்மானம் அடுத்து செனட் சபையிலும் வாக்கெடுப்பிற்கு விடப்பட வேண்டும். அது எப்போது நடக்கும் என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை.
செனட் சபையிலும் இது நிறைவேற்றப்பட்ட பின்னரே, ஜனாதிபதி டிரம்பின் கையெழுத்திற்காக அனுப்பப்படும். மற்ற சட்டமூலங்களைப் போலவே, ஜனாதிபதி நினைத்தால் தனது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தத் தீர்மானத்தை நிராகரிக்க முடியும்.
ஜனாதிபதியின் அந்த நிராகரிப்பை முறியடித்து தீர்மானத்தைச் சட்டமாக்க வேண்டுமானால், பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகிய இரண்டிலும் மூன்றில் இரண்டு பங்கு (Super-majority) பெரும்பான்மை வாக்குகள் தேவைப்படும்.
ஆனால், புதன்கிழமை இரவு பிரதிநிதிகள் சபையில் நடந்த வாக்கெடுப்பின் முடிவுகள், அதற்குரிய போதிய பலம் இன்னும் எட்டப்படவில்லை என்பதைக் காட்டுகின்றன.





