எல்லைகளை மூடும் நடவடிக்கை : மறுபரிசீலனை செய்யுமாறு WHO கோரிக்கை!!
காங்கோ ஜனநாயகக் குடியரசு (டி.ஆர்.சி) மற்றும் அதன் அண்டை நாடான உகாண்டாவில் பரவி வரும் எபோலா தொற்று காரணாக அந்நாடுகளுக்கு எதிராக பயணத் தடை விதிப்பது மற்றும் எல்லைகளை மூடுவது தொடர்பில் ஏனைய நாடுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
பயணக் கட்டுப்பாடுகள் நம்பிக்கையையும் வெளிப்படைத்தன்மையையும் சீர்குலைக்கக்கூடும் என்றும், ஒரு திறமையான பொது சுகாதார நடவடிக்கைக்கு இவை இரண்டும் அவசியமானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்குறிப்பிட்ட செயன்முறைகள் நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளைக் கடினமாக்குவதோடு, உயிர்களைக் காப்பாற்றும் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கையையும் ஊக்கமிழக்கச் செய்கின்றன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
வைரஸ் மேலும் பரவுவதைத் தடுக்க, சமூகங்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் அண்டை நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என்றும் எடுத்துரைத்துள்ளார்.
இதற்கிடையே எபோலா நோய்த்தொற்றுகளும் இறப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) 906 எபோலா நோய்த்தொற்றுகளும், 223 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





