கட்சி நிதியை சுருட்டிய கணவர்; துரோகத்தில் வீழ்ந்த முன்னாள் முதல்வர் Nicola Sturgeon!
” ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் (SNP) நிதியிலிருந்து பல லட்சம் பவுண்டுகளை கையாடல் செய்த தனது முன்னாள் கணவர் பீட்டர் முரெல் (Peter Murrell) தன்னை “ஏமாற்றி, துரோகம் இழைத்துவிட்டார். ” – என்று ஸ்காட்லாந்தின் முன்னாள் முதல்வர் நிகோலா ஸ்டர்ஜன் (Nicola Sturgeon) மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
பீட்டர் முரெல் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு, அயர்லாந்தில் நடைபெற்ற Listowel Writers’ Week நிகழ்வில் தனது சுயசரிதையை விளம்பரப்படுத்த Nicola Sturgeon கலந்துகொண்டார்.
அப்போது தனது தற்போதைய நிலை குறித்து அவர் மனம் திறந்து பேசினார்.
55 வயதான Sturgeon, தன் வாழ்க்கையிலேயே இது “மிகவும் மோசமான வாரம்” என்றும், இந்த அதிர்ச்சியிலிருந்து மீள தான் ஒரு மனநல ஆலோசகரை (Therapist) நாட வேண்டியிருக்கும் என்றும் கூறியுள்ளார்.
“நான் இப்போது நலமாக இல்லை என்பதைத்தான் இவ்வளவு நீளமாக கூறுகிறேன். ஆனால், நான் இதிலிருந்து மீண்டு வருவேன். நான் ஒரு வலுவான, மனஉறுதி கொண்ட நபர்” என்று அவர் குறிப்பிட்டார்.
பல வருடங்கள் இணைந்து வாழ்ந்த ஒருவரைப் பற்றி தனக்கு எதுவுமே தெரியவில்லை என்பதை ஒப்புக்கொள்வது மிகவும் வேதனையாக இருப்பதாகக் கூறிய அவர், இதனைப் புரிந்துகொள்ளவே எனக்கு இன்னும் சில காலம் ஆகும் என்றார்.
ஸ்டர்ஜனின் கணவரான 61 வயது பீட்டர் முரெல், 2010 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் SNP கட்சியிலிருந்து £400,310.65 (சுமார் 4 லட்சம் பவுண்டுகள்) பணத்தை கையாடல் செய்ததை எடின்பர்க் உயர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
இந்தத் தொகையைக் கொண்டு அவர் சொகுசு வாகனங்கள் (Motorhome), விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் மற்றும் தொலைநோக்கி (Telescope) போன்றவற்றை வாங்கியுள்ளார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஸ்டர்ஜனும் கைது செய்யப்பட்டு பொலிஸாரால் விசாரிக்கப்பட்டார்.
இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற தீவிர விசாரணைக்குப் பிறகு, அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நீக்கப்பட்டு, அவர் முழுமையாக விடுவிக்கப்பட்டார்.





