படகு கவிழ்த்து அதிபர் பலி: யாழில் சோகம்!
யாழ். நயினாதீவு கடற்பரப்பில் சிறிய படகில் பயணித்த போது ஏற்பட்ட திடீர் விபத்தில் சிக்கி, பாடசாலை அதிபர் ஒருவர் கடலில் வீழ்ந்து நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நயினாதீவை வசிப்பிடமாகக் கொண்ட, நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகா வித்தியாலயத்தின் அதிபரான நடராசா மயூரன் (வயது 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், அண்மையில்தான் புங்குடுதீவிலிருந்து இடமாற்றம் பெற்று நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகா வித்தியாலயத்தின் அதிபராகப் பொறுப்பேற்றிருந்தார்.
சம்பவ தினமான நேற்று, மேற்படி அதிபரும் அவருடன் பணியாற்றும் மற்றொரு ஆசிரியரும் நயினாதீவிலிருந்து குறிகட்டுவான் நோக்கிச் செல்வதற்காகப் பயணிகள் படகுச் சேவை நிலையத்துக்குச் சென்றுள்ளனர்.
எனினும், அவர்கள் வழக்கமான பயணிகள் படகைத் தவறவிட்டமையால், அவசரமாகக் கரை திரும்புவதற்காக அங்கிருந்த கடற்றொழிலாளி ஒருவரின் சிறிய ரகப் படகில் ஏறிப் பயணித்துள்ளனர்.
இதன்போது, கடலில் வீசிய பலத்த காற்று காரணமாகக் கடல் கடுமையான கொந்தளிப்புடன் காணப்பட்டுள்ளது.
படகு நடுக்கடலில் சென்றுகொண்டிருந்த போது, திடீரென எழுந்த பாரிய கடல் அலையில் அகப்பட்டுப் படகு கடுமையாக ஆடியுள்ளது. இதன் காரணமாகப் படகில் இருந்த அதிபர் நிலைதடுமாறி கடலில் தூக்கி வீசப்பட்டுள்ளார்.
அதிபர் கடலில் வீழ்ந்ததையடுத்து, படகோட்டி உடனடியாகச் செயற்பட்டு அவரை நீரின் மேலெழுப்பி மீட்கப் போராடியுள்ளார். எனினும், அதற்குள் அதிபர் பெருமளவு கடல் நீரைக் குடித்த நிலையில் ஆழ்கடலில் மூழ்கியுள்ளார்.
நீண்ட போராட்டத்தின் பின்னர் அவர் மீட்கப்பட்டு நயினாதீவு பிரதேச மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த அதிபரின் சடலம் நயினாதீவு பிரதேச மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





