போலி குறுஞ்செய்திகள் மூலம் மோசடி : சாரதிகளுக்கு எச்சரிக்கை!
போலி குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகளை அனுப்பி ஓட்டுநர்களிடமிருந்து பணத்தையும் தனிப்பட்ட தரவுகளையும் பெற்று மோசடி செய்யும் குற்றவாளிகள் தொடர்பில் இலங்கை கணினி அவசரகால பதிலளிப்புக் குழு (CERT) எச்சரிக்கை விடுத்துள்ளது.
சாலைகளில் நிறுவப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிந்துள்ளதாகக் கூறி, காவல்துறையிடம் இருந்து வருவதுபோன்ற போலி குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதாகவும், இதற்கு பதிலளிக்கும்போது தனிப்பட்ட தரவுகள், மற்றும் பணமோசடியை குற்றவாளிகள் மேற்கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவை, அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ GovPay கட்டண முறையை மிகவும் ஒத்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசரகால பதிலளிப்புக் குழு குறிப்பிடுகிறது.
மேலும், இதுபோன்ற இணையதளங்களை அணுகுவதன் மூலம், கடன் மற்றும் பற்று அட்டைத் தகவல்கள், OTP குறியீடுகள் மற்றும் தேசிய அடையாள அட்டைத் தகவல்கள் உள்ளிட்ட முக்கியமான தனிப்பட்ட தரவுகளை மோசடியாளர்கள் அணுகும் அபாயம் உள்ளது என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.





