“போராட்டம் வெடிக்க முன் மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கவும்” திகா எம்.பி. வலியுறுத்து
“மலையக மக்கள் வீதியில் இறங்கி போராடுவதற்கு முன்னர் காணி உரிமையை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் வலியுறுத்தினார்.
மலையக மக்களுக்கான காணி உரிமையின் அவசியத்துவத்தை வலியுறுத்தி ராதாகிருஷ்ணன் எம்.பியால் முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றுகையிலேயே திகாம்பரம் இவ்வாறு வலியுறுத்தினார்.
இது தொடர்பில் திகாம்பரம் எம்.பி. கூறியவை வருமாறு ,
“மலையக மக்களின் காணி பிரச்சினையென்பது நெடுநாள் பிரச்சினையாகும். எனினும், நல்லாட்சியின்போது நான் அமைச்சராக பதவி வகிக்கையில் 8 ஆயிரம் வீடுகளை அமைத்துக்கொடுத்தேன்.
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் 4 ஆயிரம் வீடுகளும், இலங்கை அரசாங்கத்தின் உதவியுடன் 4 ஆயிரம் வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டன.
நல்லாட்சியின்போதே மலையக மக்களுக்கு முதன்முதலில் காணி உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டபோது அதற்கு நாம் ஆதரவளித்தோம்.
எமது மக்கள் வீதியில் இறங்கு போராடுவதற்கு முன்னர் காணி உரிமையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
10 பேர்ச்சஸ் காணியை வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. நிறைய காணிகள் உள்ளன. ஆனால் இங்கு அதனை வழங்குவதற்கு எவருக்கும் மனம் இல்லை.
எதிரணியில் இருந்தபோது ஜனாதிபதி மலையக மக்கள் தொடர்பில் அதிகம் கதைத்தார். தற்போது அவர் வசம் அதிகாரம் உள்ளது. எனவே, மலையக மக்களுக்கு தீர்வை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும்.
அதேபோல ஆளுங்கட்சியில் உள்ள மலையக எம்.பிக்கள் எம்மை விமர்சிப்பதைவிடுத்து காணி உரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு நாம் முழு ஆதரவும் வழங்குவோம்.” – என்றார் திகாம்பரம் எம்.பி.





