பலஸ்தீன ஆதரவு நடவடிக்கை – யெவெட் கூப்பர் எழுதிய செய்தித்தாள் கட்டுரையால் சர்ச்சை
வெளியுறவு மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான செயலாளர் யெவெட் கூப்பர் (Yvette Cooper) எழுதிய செய்தித்தாள் கட்டுரை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பலஸ்தீன ஆதரவு இயக்கமான பலஸ்தீன நடவடிக்கை குறித்து அவர் எழுதிய அந்தக் கட்டுரை, நீதிமன்ற விசாரணையை பாதிக்கக்கூடும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் சேவை (CPS) முன்கூட்டியே எச்சரித்திருந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
2024 ஆம் ஆண்டு, இஸ்ரேலிய ஆயுத உற்பத்தி நிறுவனமான எல்பிட் சிஸ்டம்ஸ் யுகே (Elbit Systems UK) தொழிற்சாலையில் இடம்பெற்ற உடைப்பு மற்றும் சேதப்படுத்தல் சம்பவம் தொடர்பாக ஆறு ஆர்வலர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருந்தபோதும், அப்போதைய உள்துறைச் செயலாளரான யெவெட் கூப்பர், பலஸ்தீன நடவடிக்கை அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நியாயப்படுத்தும் வகையில் பத்திரிகை கட்டுரை எழுதியிருந்தார்.
அந்தக் கட்டுரையில், குற்றச்சாட்டுகளில் “பயங்கரவாதத் தொடர்புகள்” உள்ளதாகவும், “வன்முறை மற்றும் அச்சுறுத்தல் தொடர்பான கவலைக்கிடமான தகவல்கள்” இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து, குற்றம் சுமத்தப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர்கள், இந்தக் கட்டுரை நீதிமன்ற நடவடிக்கையை பாதிக்கும் வகையில் இருந்ததாக குற்றம் சுமத்தினர்.
இந்த நடவடிக்கை “நீதிமன்ற செயல்முறையில் அரசியல் தலையீடு செய்த மோசமான உதாரணம்” என அவர்கள் வாதிட்டனர். மறுவிசாரணைக்குப் பிறகு, கடந்த வாரம் குற்றம் சுமத்தப்பட்ட அறுவரில் நால்வர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.





