தவெகவுக்கு ஆதரவளித்த அதிமுக எம்.எல்.ஏ -க்கள் பதவி பறிபோகிறதா?
எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக கட்சியை மீறி சில சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக கட்சிக்கு ஆதரவளித்ததாக கூறப்படும் நிலையில், அவர்களுக்கு எதிராக கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு காணப்படுவதாக சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சட்ட நிபுணர்களின் விளக்கப்படி, கட்சி தாவலை தடுக்கும் நோக்கில் 1985ஆம் ஆண்டு 52வது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் 10வது அட்டவணை சேர்க்கப்பட்டது.
இதன்படி, ஒரு சட்டமன்ற உறுப்பினர் தானாகவே தனது கட்சியிலிருந்து விலகினால் அல்லது கட்சியின் உத்தரவுக்கு எதிராக வாக்களித்தால், அவரது உறுப்பினர் பதவி நீக்கப்படலாம்.
பின்னர் கொண்டுவரப்பட்ட 91வது அரசியல் சட்டத் திருத்தத்தின் படி, சட்டமன்றக் கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் பிரிந்தால் அது பிளவாக கருதப்பட்டு சில சூழ்நிலைகளில் தகுதி இழப்பு தவிர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் படி, கொறடா மற்றும் சட்டமன்றக் குழுத் தலைவர் நியமன அதிகாரம் கட்சி தலைமைக்கே உரியது என்றும், அதிமுகவில் அந்த அதிகாரம் எடப்பாடி பழனிசாமியிடமே உள்ளது என்றும் சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஒன்றாகச் சேர்ந்தாலும் அது தானாகவே கட்சி தாவல் தடைச் சட்டத்திலிருந்து விடுதலை அளிக்காது என்றும், சட்ட நடைமுறைகள் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் விளக்கப்பட்டுள்ளது.
1998ஆம் ஆண்டின் உச்சநீதிமன்ற தீர்ப்பிலும் இதுகுறித்து முக்கிய விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், தற்போதைய அரசியல் சூழலில் எந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பது சட்ட விளக்கங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என கூறப்படுகிறது.





