வித்யா படுகொலை வழக்கு: நால்வரின் மரண தண்டனை உறுதி
யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் சூம் தொழில்நுட்பம் ஊடாக உயர்நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
மாணவி சிவலோகநாதன் வித்தியா 2015ஆம் ஆண்டு கடத்திச் சென்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரால் யாழ்ப்பாணத்தில் மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் வழக்குத் தொடரப்பட்டது.
எனினும், இந்த வழக்கில் சுவிஸ் குமார் உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகளாக நிருபிக்கப்பட்டு அவர்களுக்கு, யாழ்ப்பாணம் மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் 2017ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.
இந்தத் தண்டனையிலிருந்து தங்களை விடுவிக்குமாறு கோரி குற்றவாளிகளால் உயர்நீதிமன்றத்தில் இந்த மேன்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
மேன்முறையீட்டு விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் குற்றவாளிகளில் ஒருவர் உயிரிழந்தார்.
இவ் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த மேலும் இரு பிரதிவாதிகளின் தண்டனையை நீக்குவதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையிலேயே, ‘சுவிஸ் குமார்’ உள்ளிட்ட ஏனைய நான்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர்நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.





