விமான நிலையத்தில் பணியாளர்களின் பற்றாக்குறையை ஈடு செய்யும் ரோபோக்கள்!
டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் (Tokyo’s Haneda airport) தரைவழிப் பணிகளுக்காக மனித உருவ ரோபோக்களை பயன்படுத்தவுள்ளதாக ஜப்பான் ஏர்லைன்ஸ் (JAL) அறிவித்துள்ளது.
ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் நோக்கில், இரண்டு வருட சோதனை முயற்சியாக முன்னெடுக்கப்படவுள்ள இந்த திட்டம் வரும் மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
சீனாவில் தயாரிக்கப்பட்ட இந்த ரோபோக்கள் சரக்குக் கொள்கலன்களை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்வரும் சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பு மற்றும் வேலை செய்யும் வயதுடைய மக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் தொழிலாளர் பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில் இந்த மனித ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில், இந்த ரோபோக்களை விமானத்தின் உட்புறத்தைச் சுத்தம் செய்வதற்கும், தரைவழி ஆதரவு உபகரணங்களை இயக்குவதற்கும் பயன்படுத்தலாம் என்று அந்நிறுவனம் நம்புகிறது.
பாதுகாப்பு ரோந்து மற்றும் சில்லறை விற்பனை உட்பட, ஜப்பான் முழுவதும் உள்ள சில விமான நிலையங்களில் ரோபோக்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





