புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி நகர்கிறது வடக்கு!
‘உத்திசார் சுற்றுச்சூழல் மதிப்பீடு’ தொடர்பான விசேட கலந்துரையாடல், வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை (24.04.2026) நடைபெற்றது.
வட மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக்கு ஆதரவளிக்கும் வகையில், இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகார சபையால் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் இந்த ஆய்வு மற்றும் திட்டமிடல் குறித்து ஜப்பானின் ஓரியண்டல் கன்சல்டன்ட்ஸ் குளோபல் மற்றும் இலங்கையின் கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் அண்ட் ஆர்க்கிடெக்ட்ஸ் அசோசியேட்டட் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆளுநருக்கு விரிவான விளக்கங்களை வழங்கினர்.
புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்தியில், குறிப்பாகக் காற்றாலை மின் உற்பத்தித் திட்டங்களை முன்னெடுக்கும்போது அறிவியல் ரீதியான ஆய்வுகளுடன் மக்கள் தெளிவூட்டப்பட வேண்டியது அவசியமாகும்.

நான் யாழ். மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில், தென்மராட்சி பிரதேசத்தின் மறவன்புலவு பகுதியில் காற்றாலைக் கோபுரங்கள் அமைக்க முற்பட்டபோது மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்புகளை ஆளுநர் இதன்போது நினைவுகூர்ந்தார்.
அறிவியல் ரீதியான தெளிவான ஆய்வு முடிவுகள் இன்றி மக்கள் சில அச்சப்பாடுகளை வெளிப்படுத்தும் போது, பேராசிரியர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களைக் கொண்டு அவர்களுக்குப் புரியும் வகையில் தெளிவூட்டல்களை வழங்க வேண்டும்.
எவ்விதமான அபிவிருத்திகளும் அந்த மண்ணின் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார்.
வட மாகாணத்தில் சூரிய ஒளி, காற்றாலை மற்றும் கடல் அலைகள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குப் மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன.
2030ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒட்டுமொத்த மின் உற்பத்தியில் 70 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற இலக்கை அடைவதற்கு இந்த ஆய்வு நடவடிக்கைகள் மிக முக்கியமானவை.
வவுனியா தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களிலும் (யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு) இதற்கான சாத்தியப்பாட்டு ஆய்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புதுப்பிக்க சக்தி ஊடான திட்டங்கள் ‘சூழல் நேயமான’ திட்டங்கள் என்பதால் அவை அவசியமானவை என்றும் ஆளுநர் வலியுறுத்தினார்.
இக்கலந்துரையாடலில் இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகார சபையின் உதவி இயக்குநர்கள் பொறியியலாளர் சதுர வன்னியாராச்சி, பாலித அபயரத்ன, ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் மற்றும் சர்வதேச, உள்நாட்டு ஆலோசனைக் குழுக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.





