ஈரானை சூழும் பொருளாதார பேரிடி – சிக்கனத்தை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தல்
ஈரானில் பொருளாதார நிலை மேலும் மோசமடையக்கூடும் என்ற அச்சத்தில், இஸ்லாமியக் குடியரசின் பாதுகாப்புப் படையினர் உட்பட பலர் மக்கள் சிக்கனத்தை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றம் தொடர்ந்தால், அரசாங்கம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிரமம் ஏற்படுமா?
பேச்சுவார்த்தைகளை நிறுத்தும் நிலையை ஈரான் தாங்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
போருக்கு முன்பே பொருளாதார தடைகள், பணவீக்கம் மற்றும் நாணய மதிப்பிழப்பு காரணமாக மக்கள் கடுமையான நெருக்கடியில் இருந்தனர்.
அத்தியாவசிய தேவைகளுக்கே பெரும்பாலான குடும்பங்கள் செலவிடும் நிலை ஏற்பட்டிருந்தது.
இப்போது மூடப்பட்ட வணிகங்கள், பாதிக்கப்பட்ட தொழில்துறைகள் மற்றும் ஏற்றுமதி சரிவு ஆகியவை
சேர்ந்து பொருளாதார அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளன.
உணவுப் பொருட்களின் விலை கடந்த ஆண்டில் இரட்டிப்பாக உயர்ந்துள்ள நிலையில், ஈரானின் நாணயமான ரியால் மேலும் மதிப்பிழந்து, பணவீக்கம் தீவிரமடைந்துள்ளது.
அதிகாரிகள் சுமார் 270 பில்லியன் டாலர் அளவிலான பொருளாதார சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளனர்.
இதன் தாக்கம் குறிப்பாக சிறு இணையவழி வணிகங்களில் ஈடுபட்ட பெண்களுக்கு கடுமையாக உள்ளது. இணைய தடைகள் மற்றும் இடையூறுகள் காரணமாக சமூக ஊடகங்கள் மூலம் வருமானம் ஈட்டிய பலர் திடீரென வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
மொத்தத்தில், போரும் இணையக் கட்டுப்பாடுகளும் ஈரானின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, பல குடும்பங்களின் அன்றாட
வாழ்க்கையையும் கடுமையாக பாதித்து வருவதாக இந்த நிலை காட்டுகிறது.





