அமைதிக்கான நடை பயணம்: தேரர்கள் இலங்கை வருகை!
‘Walk for Peace Program in Sri Lanka’ அமைதிக்கான நடைப்பயணத்திற்காக , அமெரிக்காவில் அமைதிக்கான நடைபயணத்திற்குத் தலைமை தாங்கிய வண. பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட நான்கு தேரர்கள், இன்று (21) முற்பகல் நாட்டை வந்தடைந்தனர்.
இந்த அமைதிக்கான நடைப்பயணத்தில் கலந்துகொண்டு, உலகம் முழுவதும் அன்பைப் பெற்ற ‘ஆலோகா’ (Aloka) என்ற நாயும் அவர்களுடன் வருகை தந்துள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த வண. பஞ்ஞாகர தேரர் தலைமையிலான தேரர்களை, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோர் வரவேற்றனர்.
இந்த அமைதிக்கான நடைப்பயணத்தில் கலந்துகொள்வதற்காக மேலும் சில தேரர்கள், கடந்த 18 ஆம் திகதி இந்நாட்டுக்கு வருகை தந்ததுடன், இன்று (21) பிற்பகல் 3.00 மணிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதிக்கு முன்பாக இந்த அமைதிக்கான நடைப்பயணத்திற்கு ஆசிர்வாதம் பெற்றுக்கொள்ளும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதன்போது, அடமஸ்தானாதிபதி தேரர் தலைமையிலான மகா சங்கத்தினரால் ஸ்ரீ மகா போதியின் கன்று ஒன்றும் வண. பஞ்ஞாகர தேரர் தலைமையிலான தேரர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
மேலும், இன்று (21) பிற்பகல் 4.00 மணிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலி மகா சேயவிற்கு முன்பாக விசேட மத வழிபாடுகளும் நடைபெறவுள்ளது.
ஏப்ரல் 22 ஆம் திகதி காலை தம்புள்ளை புனிதத்தலத்திலிருந்து ஆரம்பமாகும் இந்த நடைப்பயணம் நாவுல, மாத்தளை, கண்டி, கடுகண்ணாவை, கேகாலை, தோலங்கமுவ, கஜுகம, யக்கலை, மகர மற்றும் களனி வழியாக ஏப்ரல் 28ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தை வந்தடையவுள்ளது.
அமைதிக்கான நடைப்பயணத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில், கொண்டவரப்பட்ட ஸ்ரீ மகா போதியின் கன்று. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், இராஜதந்திர ரீதியாக அமெரிக்காவிலிருந்து வருகை தந்துள்ள மகா சங்கத்தினரிடம் கையளிப்படவுள்ளது.
அதன்பின்னர், கௌரவத்திற்குரிய தேரர்கள் ஊர்வலமாக கங்காராம விகாரைக்கு அழைத்து வரப்படவுள்ளதுடன், அங்கு தேசிய வடிவமைப்பு நிலையத்தினால் நடத்தப்படும் ‘We are the Design’ எனும் நிகழ்ச்சியை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதி செயலகம், Clean Sri Lanka செயலகம், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, அரசாங்கத் தகவல் திணைக்களம், இலங்கைப் பொலிஸ் மற்றும் முப்படைகள், தேசிய வடிவமைப்பு நிலையம் உள்ளிட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் முழுமையான அனுசரணையுடன் இந்த அமைதிக்கான நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.





