ஐரோப்பாவில் ஜெட் எரிபொருள் நெருக்கடி – கோடை விமானப் பயணங்கள் பாதிக்கப்படுமா?
ஐரோப்பாவில் ஜெட் எரிபொருள் கையிருப்பு வெறும் ஆறு வாரங்களுக்கு மட்டுமே இருப்பதாக சர்வதேச எரிசக்தி துறை வட்டாரங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலை தொடர்ந்தால், கோடை விடுமுறைக்கான விமானப் பயணங்களில் இரத்துகள் மற்றும் கட்டண உயர்வுகள் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பாரிஸில் செய்தியாளர்களிடம் பேசிய சர்வதேச எரிசக்தி முகமையின் தலைவர் ஃபாத்திஹ் பிரோல், மத்திய கிழக்கு மோதல்களின் காரணமாக ஜெட் எரிபொருள் விநியோகத்தில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக கூறினார். இதேபோன்ற கவலைகளை முன்பே விமானத் துறையும் வெளிப்படுத்தியிருந்தது.
எரிபொருள் தட்டுப்பாடு நீடித்தால் பயணச்சீட்டு விலைகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக ரியான்ஏர் நிறுவனத்தின் தலைவர் மைக்கேல் ஓ’லியரி எச்சரித்திருந்தார்.
இதன் தாக்கமாக, டச்சு விமான நிறுவனம் கே.எல்.எம் ஏற்கனவே 160 விமானங்களை இரத்து செய்துள்ளது.
மேலும், எரிபொருள் விலை உயர்வால் சில விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணங்களை அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளன. ஈஸிஜெட் நிறுவனம், கடந்த மாதம் மட்டும் £25 மில்லியன் இழப்பை சந்தித்ததாகவும், முன்பதிவுகள் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த நெருக்கடி தொடர்ந்தால், கோடை காலத்தில் விமானப் பயண தேவையும் விலைகளும் பெரிதும் பாதிக்கப்படலாம் என விமானத் துறை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.





