இஸ்ரேல் தாக்குதல் – தெற்கு லெபனானை இணைத்த கடைசி பாலமும் அழிக்கப்பட்டது
தெற்கு லெபனானை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் முக்கியமான கடைசி பாலம் இஸ்ரேலிய தாக்குதலில் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டைர் (Tyre) பகுதியையும் சிடோன் (Sidon) நகரத்தையும் இணைக்கும் காஸ்மியே பாலம், அடுத்தடுத்து நடத்தப்பட்ட இரண்டு வான்வழித் தாக்குதல்களின் விளைவாக சேதமடைந்து பின்னர் முழுமையாக இடிந்து வீழ்ந்ததாக லெபனானின் அரசுக்கு சொந்தமான தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த பாலம் தெற்கு லெபனானின் முக்கிய போக்குவரத்து இணைப்பாக இருந்ததால், அதன் அழிவு அந்தப் பகுதியில் உள்ள மக்களின் அன்றாட வாழ்க்கையையும், அவசர சேவைகளின் இயக்கத்தையும் கடுமையாக பாதிக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, மருத்துவ உதவி, உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்து சிரமமாகும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தெற்கு லெபனானில் இருந்து வடக்கு பகுதிகளுக்கு செல்லும் முக்கிய வீதி இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால், மக்கள் இடம்பெயர்வதும் கடினமாகியுள்ளது. இது மனிதாபிமான சிக்கல்களை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என்ற கவலைகளும் எழுந்துள்ளன.
இந்நிலையில், லெபனானின் அரசு உட்கட்டமைப்புகளை ஹிஸ்புல்லா இயக்கம் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில் பாலங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் முன்னதாகவே தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல், ஏற்கனவே பதற்றம் நிலவும் பிராந்தியத்தில் மேலும் மோதலை தீவிரப்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.





