பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் – பிரித்தானியா, ஓமான் தலைவர்கள் எச்சரிக்கை
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான பதற்றம் மேலும் அதிகரிக்கக் கூடாது என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும், ஓமான் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கும் வலியுறுத்தியுள்ளனர்.
இரு தலைவர்களும் அமெரிக்கா–ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து தொலைபேசி வழியாக கலந்துரையாடியதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த வார இறுதியில் பாகிஸ்தானில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் பற்றியும் அவர்கள் விவாதித்ததுடன், இரு தரப்பினரும் விரைவில் ஒரு தீர்வை அடைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், போர் நிறுத்தம் தொடர்வதும் அனைத்து தரப்பினரும் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளைத் தவிர்ப்பதும் அவசியம் என்று தலைவர்கள் ஒருமித்த கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சமீபத்தில் வளைகுடாப் பகுதிக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் ஸ்டார்மர், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் சந்திப்பு நடத்தினார்.
ஹார்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான கடற்பாதையை மீட்டெடுப்பதற்காக சர்வதேச நட்பு நாடுகள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





