இஸ்ரேல் தூதரகத்தை இலக்கு வைத்து துருக்கியில் பயங்கரவாதத் தாக்குதல்: நடந்தது என்ன?
துருக்கி Turkish இஸ்தான்புல் Istanbul நகரிலுள்ள இஸ்ரேல் தூதரகத்துக்கு அருகில் இன்று (07) இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும், பாரிய அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு தரப்பினர், மேற்படி தாக்குதலை முறியடித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும் இருவரை பொலிஸார் மடக்கிப்பிடித்துள்ளனர்.
அவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
மதம் சார்ந்த தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களால் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கக்கூடும் என்று துருக்கியின் உள்துறை அமைச்சர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
சம்பவத்தின் போது குறைந்தது இருபதுக்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டுள்ளன.
தாக்குதலில் இரு காவல்துறையினர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இஸரேல் தூதரகத்தை இலக்கு வைத்து பட்டப் பகலில்நடத்தப்பட்ட இத்தாக்குதலையடுத்து அப்பகுதியில் படையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
அதேவேளை, மேற்படி தாக்குதல் சம்பவத்தை இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சு வன்மையாகக் கண்டித்துள்ளது.
தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்த துருக்கி பாதுகாப்பு படையினருக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





