‘மாவா’போதைப்பாக்கு விற்பனை நிலையம் சுற்றிவளைப்பு: வவுனியாவில் 6 பேர் கைது!
வவுனியா, குடியிருப்பு பூந்தோட்டம் வீதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த ‘மாவா’ போதைப்பாக்கு விற்பனை நிலையமொன்றை வவுனியா பொலிஸார் இன்று அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர்.
இந்தச் சோதனை நடவடிக்கையின் போது கடையின் உரிமையாளர் மற்றும் மாணவர்கள் உட்பட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் தடைசெய்யப்பட்ட ‘மாவா’ பாக்கு விற்பனை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது என்று பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.
இதனைத் தொடர்ந்து, வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் இந்த விசேட முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
முற்றுகையின் போது கடையை நடத்திச் சென்ற ஒருவரைப் பொலிஸார் கைது செய்ததுடன், அங்கு ‘மாவா’ பாக்கினை கொள்வனவு செய்வதற்காகச் சென்றிருந்த மாணவர்கள் உட்பட ஐந்து பேரையும் கைது செய்தனர்.
அங்கிருந்து பெருமளவிலான மாவா பாக்குகள், றோஸ்பவுடர், பொமலைன்ட் உள்ளிட்ட போதைப்பொருள் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அறுவரும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் அவர்கள் வவுனியா நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா நகர் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தப் பொலிஸார் இவ்வாறான அதிரடிச் சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





