பருத்தித்துறையில் மூன்று மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை முன்னெடுப்பு!
யாழ். பருத்தித்துறை முனைப் பகுதியில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற படகு ஒன்று, இன்று அதிகாலை வரையில் கரை திரும்பாத நிலையில் அதில் பயணித்த மூவரும் காணாமல்போயுள்ளனர் என்று உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை அதிகாலை வழக்கம் போல் மீன்பிடிக்கப் புறப்பட்ட படகு, இன்று திங்கட்கிழமை அதிகாலை கரை திரும்பியிருக்க வேண்டும். எனினும், நீண்ட நேரமாகியும் படகு கரை திரும்பாததையடுத்து, உறவினர்கள் மற்றும் சக மீனவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
காணாமல்போன படகில் மூன்று மீனவர்கள் பயணித்தனர் என்று அவர்களது உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும், அவர்களின் விவரங்கள் இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.
காணாமல்போன மீனவர்களையும் படகையும் தேடிக் கண்டுபிடிப்பதற்காகக் கடற்படையினரின் உதவி நாடப்பட்டுள்ளது. அத்துடன், அப்பகுதி மீனவர்களும் இணைந்து கடல் பகுதியில் தீவிரத் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கடலில் நிலவும் சீரற்ற காலநிலை அல்லது இயந்திரக் கோளாறு காரணமாகப் படகு திசைமாறிச் சென்றிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.





