இனி வீட்டிலிருந்தே தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள்!
இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகளை பொதுமக்கள் இலகுவாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்வதற்காக e-Service எனும் புதிய டிஜிட்டல் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, பொதுமக்கள் இனி கிராம அலுவலர் அலுவலகங்களுக்கோ அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கோ நேரில் செல்ல வேண்டிய அவசியம் இன்றி, eservices.elections.gov.lk என்ற இணையத்தளம் அல்லது வழங்கப்பட்டுள்ள QR குறியீட்டை (QR Code) ஸ்கேன் செய்வதன் மூலம் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
இந்த இணைய நுழைவாயில் ஊடாக 2026ஆம் ஆண்டிற்கான தேருநர் இடாப்பில் புதிய பதிவுகளை மேற்கொள்ளுதல், வசிப்பிட முகவரி மாற்றங்களுக்கு விண்ணப்பித்தல் மற்றும் 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் தமது பெயர்களைப் பதிவு செய்தல் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், 2015ஆம் ஆண்டு முதல் இதுவரையிலான வாக்காளர் பதிவுத் தகவல்களைத் தேர்தல் ஆணையாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் உத்தியோகபூர்வமாகப் பெற்றுக்கொள்ளவும், விசேட தேவையுடைய பிரஜைகள் வாக்களிப்பதற்கான விசேட தேவைகளை ஆணைக்குழுவிற்குச் சமர்ப்பிக்கவும் இந்த தளம் வழிவகை செய்கிறது.
ஒவ்வொரு சேவைக்கும் தேவையான விரிவான அறிவுறுத்தல்கள் அந்தந்த இணையப் பக்கங்களிலேயே வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையாளர் நாயகம் ரசிக பீரிஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






